[X] Close

மதுரை அருகே புலிப்பட்டியில் 123.6 மிமீ மழை


madurai-rains

மழைக்காலம் தொடங்கிவிட்டதோ என எண்ணத்தோன்றும் வகையில் மதுரையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் - மதுரையில் அக்கினி வெக்கையை தணித்த கோடை மழை. இடம்: அண்ணா பேருந்து நிலையம்

  • kamadenu
  • Posted: 10 May, 2018 10:45 am
  • அ+ அ-

மதுரை அருகே புலிப்பட்டியில் நேற்று முன்தினம் 123.60 மி.மீ. மழை பெய்தது. வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 334 கன அடியாக அதிகரித்துள்ளது.

மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த 10 நாட்களாகவே அதிகமாக உள்ளது. கள்ளழகர் சித்திரைத் திருவிழா முடிந்து மதுரை திரும்பும்போது கடந்த மே 3-ம் தேதி மழை பெய்தது. மே 5, 6, 7 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்தது. வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் விநாடிக்கு 100 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று முன்தினம் 276 கன அடியாக அதிகரித்தது.

தொடர் மழையால் நேற்று நீர்வரத்து 334 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 34.35 அடியாக இருந்தது. அணையிலிருந்து மதுரை குடிநீருக்காக 48 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.50 அடியாகவும், நீர்வரத்து 286 கன அடியாகவும், வெளியேற்றம் 100 கன அடியாகவும் இருந்தது.

நேற்று முன்தினம் பகலிலேயே மேகக் கூட்டம் காணப்பட்டது. மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாலையில் மழை பெய்யத் தொடங்கியது. பலத்த இடி மற்றும் மின்னலுடன் பெய்த மழை இரவு 10 மணி வரை நீடித்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் மின் கம்பங்கள் சேதமடைந்ததால் மின் தடை ஏற்பட்டது. மதுரைக்கு வடக்கு பகுதியில் மேலூர் வரை பலத்த மழை பெய்தது. இந்த மழை நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு பெரிதும் உதவும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ. ): சிட்டம்பட்டி-101, கள்ளந்திரி-57, தனியாமங்கலம்-35, மேலூர்-90.2, சாத்தியாறு-86, வாடிப்பட்டி-20, திருமங்கலம்-50.20, மதுரை-23, விரகனூர்-38, இடையபட்டி-85.20, புலிப்பட்டி-123.60, சோழவந்தான்-9.10, மேட்டுப்பட்டி-65, ஆண்டிப்பட்டி-15.20. தேக்கடி 1.2, சண்முகாநதி-3, உத்தமபாளையம்-3.2, வீரபாண்டி-8, வைகை அணை-3.6, கொடைக்கானல் 2.2.

மாவட்டம் முழுவதும் 822 மிமீ மழை பெய்த போதும் கள்ளிக்குடி, குப்பணம்பட்டி, உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளில் மழை இல்லை. நேற்று மாலையும் மதுரையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுமா?

 மதுரையில் சித்திரைத் திருவிழாவுக்கு முன்னதாகவே, குடிநீர் விநியோகத்தை 2 நாட்களுக்கு ஒருமுறை என்றிருந்ததை 4 நாட்களுக்கு ஒருமுறை என மாநகராட்சி மாற்றியது. இதற்காக வைகை அணையிலிருந்து தினசரி திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 60 கன அடியிலிருந்து 48 கன அடியாக குறைக்கப்பட்டது. சித்திரை திருவிழாவின்போது 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தற்போது மீண்டும் 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போது பெய்யும் மழை தொடர்ந்தால் மதுரைக்கு தினசரி திறக்கப்படும் குடிநீரின் அளவு 48 கன அடியிலிருந்து 60 கன அடியாக அதிகரிக்கவும், 4 நாட்களுக்கு ஒருமுறை என்றிருக்கும் குடிநீர் விநியோகத்தை 2 நாட்களுக்கு ஒருமுறையாக மாற்றவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close