[X] Close

164 ஆண்டுகளாக பணி புரிந்தும் அரசு ஊழியர் அந்தஸ்து பெறாத கிராமிய அஞ்சல் ஊழியர்கள்: மே 22 முதல் வேலை நிறுத்தம்


oldest-postoffice-government-recognition

  • kamadenu
  • Posted: 09 May, 2018 11:29 am
  • அ+ அ-

ஆங்கிலேயர் காலம் முதல் தற்போது வரை 160 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஊழியர் அந்தஸ்து பெற முடியாத கிராமிய அஞ்சல் ஊழியர்கள், மே 22-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்க உள்ளனர்.

இந்திய அஞ்சல்துறை 1.55 லட்சம் அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய பழமையான துறையாகும். இந்த துறையில் 2.90 லட்சம் பேர் நாடு முழுவதும் பணிபுரிகிறார்கள். இதில், 2.49 லட்சம் பேர் கிராமிய அஞ்சல் ஊழியர்கள். நாட்டில் மொத்தமுள்ள 1,55,000 அஞ்சல் அலுவலகங்களில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 312 அஞ்சல் அலுவலகங்கள் கிராமப்புறங்களில் செயல்படும் கிராமிய அஞ்சல் அலுவலகங்களே.

இந்த அலுவலகங்களில் பணிபுரியும் கிராம அஞ்சல் அதிகாரி, தபால் பை எடுத்து வருபவர், விநியோகம் செய்பவர், தபால் பை பரிமாற்றம் செய்பவர், துணை அஞ்சலக உதவியாளர்கள் உள்ளிட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள், ஆங்கிலேயர் காலம் முதல் தற்போது வரை பகுதிநேர பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இலாகா அலுவலர்களை போல் (நிரந்தரப் பணியாளர்கள்) இவர்களும் அனைத்து வேலைகளையும் செய்கின்றனர்.

ஆனால், தற்போது வரை குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.9 ஆயிரம் வரை மட்டுமே ஊதியம் பெறுகின்றனர். 7-வது ஊதியக் குழுவில் கமலேஷ் சந்திரா என்ற அதிகாரி தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி 2016-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. அந்த கமிட்டி பரிந்துரையில் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு சாதகமான பல பரிந்துரைகள் அளிக்கப்பட்டு இதுவரை அமல்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனால், இந்த பரிந்துரைகளை அமல்படுத்தாததை கண்டித்து கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வரும் 22 –ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதனால், கிராமங்களுக்கு தபால் பட்டுவாடா, மணியார்டர் பட்டுவாடா, பதிவு தபால், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதியத் தொகை வழங்குதல், மாதாந்திர சேமிப்பு மற்றும் கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்ட பணிகள் முற்றிலும் ஸ்தம்பிக்கும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க மாநிலச் செயலாளர் இஸ்மாயில் கூறியது: கடந்த 1854-ம் ஆண்டில் பிரிட்டிஷார் தபால்துறைக்குள்ளே புறநிலை ஊழியர்கள் துறை ஒன்றை உருவாக்கினார்கள்.

அவர்களைத்தான் தற்போது கிராமிய அஞ்சல் ஊழியர்களாக பெயர் மாற்றம் செய்துள்ளனர். தபால் பட்டுவாடா, சேமிப்புக் கணக்கு, இன்சூரன்ஸ், மின்சாரக் கட்டணம் வசூலித்தல், தொலைபேசிக் கட்டணம் வசூலித்தல், மணியார்டர் பட்டுவாடா, ரிஜிஸ்டர் புக்கிங், ஸ்பீடு போஸ்ட் புக்கிங், தேசிய வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட இலாகா ஊழியர்கள் செய்யக்கூடிய அனைத்துப் பணிகளையும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் செய்கிறார்கள்.

கடந்த 164 ஆண்டாக தற்போது வரை கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்திய அஞ்சல் துறை வருவாயில் 73 சதவீதம் வருவாய் கிராமிய அஞ்சல் அலுவலகங்கள் மூலமே கிடைக்கிறது. கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் மட்டும் ஒரு ஆண்டுக்கு ப்ரீமியம் ரூ. 6 ஆயிரம் கோடி கிடைக்கிறது.

1977-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், ஒரு வழக்கில் கிராமிய அஞ்சல் ஊழியர்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாடகை கொடுக்காத அஞ்சல்துறை

இஸ்மாயில் மேலும் கூறுகையில், ‘‘தற்போது கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களை கணினி மயமாக்கப் போகிறார்கள். ஏற்கெனவே கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களுக்கு கட்டிட வாடகை, மின்கட்டணம் கூட அஞ்சல் துறை கொடுப்பது கிடையாது. கிராமிய அஞ்சல் ஊழியர்களே தங்கள் ஊதியத்தை பகிர்ந்து அந்த செலவினத்தை சமாளிக்கின்றனர். போக்குவரத்து படி கிடையாது. பென்ஷன் கிடையாது.

 30 முதல் 40 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறும்போது கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு வெறும் 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர். வெளியுலகுக்குத்தான் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கவுரவமாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் வறுமையில் வாடி வதங்கி கொண்டிருக்கிறார்கள். அதனால், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளோம், ’’ என்றார்.

- ஒய். ஆண்டனி செல்வராஜ்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close