[X] Close
 

பல்லாங்குழி முதல் ஆடு புலி ஆட்டம் வரை..! - பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் நூலகங்கள்


traditional-games-library-games

மதுரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் கோடைகால பயிற்சி முகாமில் குதூகலத்துடன் பங்கேற்ற குழந்தைகள்.

  • kamadenu
  • Posted: 09 May, 2018 11:24 am
  • அ+ அ-

பள்ளிக் குழந்தைகளுக்கு மறந்துபோன பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுத் தரவும், வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மைய நூலகங்களில், இந்த ஆண்டு முதல் குழந்தைகளுக்கான கோடைகால முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ஆண்டு முழுவதும் புத்தகப் பையைச் சுமக்கும் குழந்தைகள், கோடை விடுமுறை விட்டதும் கொண்டாட்டமாகி விடுவார்கள். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது, பெற்றோருடன் சுற்றுலா செல்வது என கோடையை உற்சாகமாக கழிப்பர். 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடை விடுமுறையில் உறவினர் வீடுகளுக்கு சென்றால் ,அங்கு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட ஆர்வம் காட்டுவர்.

ஆனால் தற்போது, விளையாடவும், வாசிக்கவும் குழந்தைகளை பெற்றோர் வழிகாட்டுவதில்லை. அதனால், பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம், தாயக்கட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி யாருக்கும் தெரியவில்லை. அதை முறையாக கற்றுக் கொடுக்கவும் ஆளில்லை. 

டெம்பிள் ரன், ஆங்ரி பேர்ட்ஸ், கேண்டி க்ரஷ் என்று ஸ்மார்ட் போன் விளையாட்டுகளில் நேரத்தை தொலைத்து வருகின்றனர். அந்த மாய விளையாட்டுகளின் உலகில் இருந்து குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்கவும், வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், இந்த ஆண்டு முதல் மாவட்ட மைய நூலகங்களில் குழந்தைகளுக்கான கோடை கால முகாம் தொடங்கி நடக்கிறது. மே 1-ம் தேதி தொடங்கிய இந்த முகாம், இம்மாதம் 31 வரை நடக்கிறது. மாவட்ட மைய நூலகத்தில் குழந்தைகளுக்கான நூலகப் பிரிவில் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. 

இதுகுறித்து நூலக அலுவலர் ராஜ்குமார் கூறுகையில், ‘‘முன்பெல்லாம் பள்ளிகளிலேயே குழந்தைகளிடம் கோடை விடுமுறையில் நூலகங்களுக்கு செல்ல வேண்டும், நூலக உறுப்பினராக வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்துவர். 
அதனால், பகுதி நேர நூலகங்கள் முதல் மாவட்ட மைய நூலகங்கள் வரை பள்ளிக் குழந்தைகள் கோடை விடுமுறை நாட்களில் அதிகளவு நூலகங்களுக்கு வருவார்கள். வாசிப்பு பழக்கம் வளர்ந்தது.

தற்போதைய மதிப்பெண் கல்வியில் வாசிப்பிற்கான நேரமும், நூலகம் பற்றிய விழிப்புணர்வும் குழந்தைகளிடம் இல்லை. எல்லாமே கூகுளில் கிடைத்துவிடும் என்று நவீன கணினி யுகத்தில் கிணற்றுத் தவளையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

அதுபோல வீட்டிலும், பள்ளிகளிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள், விளையாடுவோரின் சிந்திக்கும் ஆற்றலையும், அறிவாற்றலையும் உயர்த்தக் கூடியது. ஆனால், தற்போது பாரம்பரிய விளையாட்டும், வாசிப்பு பழக்கமும் இல்லாததால் மதிப்பெண் கல்வியிலும் குழந்தைகளால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதனால், இந்த ஆண்டு முதல் பள்ளி குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்கவும், வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும் நூலகங்களில் கோடைகால முகாம் தொடங்கப்பட்டுள்ளது. 

பல்லாங்குழி, தாயக் கட்டம், ஆடு புலி ஆட்டம், கிச்சு கிச்சு தாம்பாளம்,குலை குலையாய் முந்திரிக்கா, கதை சொல்லி, சதுரங்கம், கையெழுத்துப் பயிற்சி மற்றும் வாசிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், நூலகத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றியும் சொல்லிக் கொடுக்கிறோம்.

இதில் சிறப்பாகச் செயல்படும் குழந்தைகளுக்கும், முகாம் நாட்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் வருவோருக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. தற்போது இந்த பயிற்சி முகாமில் 18 முதல் 24 குழந்தைகள் தினமும் வருகின்றனர். தற்போது வெயில் காலம் என்பதால் வெயில் இல்லாத நேரத்தில் முகாம் நடத்தப்படுகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

- ஒய். ஆண்டனி செல்வராஜ்

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close