[X] Close
 

அதிகாரிகள் அனைவரும் அதிரடி இடமாற்றம்: திண்டுக்கல் வனத்துறை புத்துயிர் பெறுமா?


dindugal-forest-department

கொடைக்கானல் மலைப் பகுதியில் காணப்படும் அடர்ந்த வனப்பகுதி

  • kamadenu
  • Posted: 08 May, 2018 13:19 pm
  • அ+ அ-

திண்டுக்கல் மாவட்ட வனத்துறையில் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இனியாவது மாவட்ட வனத்துறை புத்துயிர் பெறுமா என்ற எதிர்பார்ப்பு இயற்கை ஆர்வலர்களிடையே ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வன மாவட்ட அலுவலராக பணிபுரிந்த முருகன், வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கும், திண்டுக்கல் வன மாவட்ட அலுவலராக பணிபுரிந்த வெங்கடேசன் கோயம்புத்தூருக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக கொடைக்கானல் வன மாவட்ட அலுவலராக தேஜஸ்வி, திண்டுக்கல் வன மாவட்ட அலுவலராக சி.வித்யா ஆகியோர் பொறுப்பேற்க உள்ளனர்.

திண்டுக்கல் வட்டார தலைமை வன பாதுகாவலராக பணிபுரிந்த நாகநாதனுக்கு பதிலாக வி.திருநாவுக்கரசு பொறுப்பேற்க உள்ளார். வனத்துறை அதிகாரிகளின் இந்த பணியிட மாற்றம் வரவேற்கத் தகுந்த விஷயமாக வன ஆர்வலர்கள் பலரும் கருதுகின்றனர்.

வனத்துறையினருக்கு எதிர்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய வனப்பகுதியாக கொடைக்கானல் மலைப்பகுதி உள்ளது. கடந்த காலங்களில் கொடைக்கானல் வனத்துறையினருக்கும் மலைகிராம மக்கள், சுற்றுலா பயணிகள், சுற்றுலாவை வாழ்வாதாரமாக கொண்ட உள்ளூர்காரர்கள் என பலரிடமும் சுமுக உறவு காணப்படவில்லை.

சுற்றுலா பயணிகளை அறையில் அடைத்து வைத்து வனத்துறையினர் தாக்கிய சம்பவமும் நடைபெற்றது. இதேபோல ராணுவ வீரர்கள் சிலர் சுற்றுலா வந்தபோது வழக்கம்போல் அப்பாவி சுற்றுலா பயணிகளிடம் காட்டுவது போல் தங்கள் செயல்பாட்டை ராணுவ வீரர்களிடம் காட்ட, அவர்கள் வனத்துறையினரை தாக்கினர். 

வனத்துறையினரால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் வனத்துறையினரின் மீதான எதிர்ப்பு அதிகரித்தது. இதையடுத்து, கொடைக்கானல் நகரிலும், மலைகிராமங்களிலும் வனத்துறையினருக்கு எதிராக கண்டன ஊர்வலம், கடையடைப்பு என பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றது. வனத்துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே வனத்துறையை எதிர்த்து போராட்டம் நடத்தியது தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.

கொடைக்கானல் வனத்துறையில் பணிபுரியும் சிலர் மலைகிராம மக்கள், சுற்றுலா பயணிகளிடம் சுமுகமான அணுகுமுறையை காட்டினாலும், பலரின் செயல்பாடு வனத்துறையினருக்கு கடும் அவப்பெயரை ஏற்படுத்தி வந்தது.

சில தினங்களுக்கு முன்பு கூட சுற்றுலா டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் கோரிக்கைக்காக வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களிடம் வனத்துறையினர் முறையாக பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. பின்னர் வருவாய்த் துறையினர் தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு கண்டனர்.


மகேந்திரன்

விடிவு பிறக்குமா?

இதுகுறித்து பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் கடும் மோதல் போக்கை வனத்துறையினர் கையாண்டு வந்தனர்.

இதற்கு இங்கிருந்த அதிகாரிகளின் அணுகுமுறைதான் காரணம். இனி வரும் அதிகாரிகளாவது மலைகிராம மக்கள், சுற்றுலா பயணிகள், சுற்றுலாவை வாழ்வாதாரமாக கொண்டவர்கள் என அனைத்து தரப்பினருடனும் சுமுக உறவுடன் செயல்பட்டு வனத்தைப் பாதுகாக்க வேண்டும். வனப்பகுதியை காப்பதில் கொடைக்கானல் மலைப்பகுதி மக்களுக்கு மிகுந்த அக்கறை உண்டு. ஏனென்றால், இந்த மலைதான் அவர்களின் வாழ்வாதாரம் என்றார்.

கொடைக்கானலில் மரம் கடத்தல்

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி, பன்றிமலை, கே.சி.பட்டி, ஆடலூர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் சிறுமலை பகுதி உள்ளது. இப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன என தொடர்ந்து மலைகிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தனியார் இடத்தில் மரம் வெட்ட அனுமதி வாங்கியுள்ளோம் என ஒரு பெர்மிட் மட்டும் வாங்கிக்கொண்டு பல லோடுகள் லாரிகளில் மரங்கள் மலையிலிருந்து இறக்கப்படுவதாகவும், இதை வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை என்றும் மலைகிராம மக்கள் குறை கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர்.

வனத்தை பாதுகாக்க இதுபோன்று மரங்கள் கடத்தலை தடுக்க புதிதாக பொறுப்பேற்கும் அதிகாரி அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இயற்கை ஆர்வலர்களிடம் உள்ளது.

- பி.டி.ரவிச்சந்திரன்

 

 

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close