[X] Close

திருச்சி நூலகங்களில் 80 நாட்களில் 30,381 உறுப்பினர்கள்: மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை


trichy-library-membership-record

திருச்சி மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட கேடயத்துடன் மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார்.

  • kamadenu
  • Posted: 08 May, 2018 13:11 pm
  • அ+ அ-

நூலகங்களில் உறுப்பினர் சேர்க்கையில் மாநில அளவில் திருச்சி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 80 நாட்களில் 30,381 உறுப்பினர்களை சேர்த்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

உலக புத்தக தினம் ஆண்டுதோறும் ஏப்.23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பொது நூலக இயக்ககம் சார்பில் இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பு முகாம்கள் கடந்த ஜனவரி 24 முதல் ஏப்ரல் 15 வரை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நூலகங்களில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்றது.

இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட மைய நூலகம், முழு நேர கிளை நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகங்கள் என மொத்தமுள்ள 142 நூலகங்களில் வரையறுக்கப்பட்ட 80 நாட்களில் 30,381 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

தமிழக அளவில் நூலகத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்து திருச்சி மாவட்டம் முதலிடம் பெற்றது. உலக புத்தக தினமான ஏப்.23-ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திருச்சி மாவட்ட நூலக அலுவலர் அ.பொ. சிவக்குமாரிடம் முதலிடம் பெற்றதற்கான கேடயத்தை வழங்கிப் பாராட்டினார்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் ‘தி இந்து’விடம் கூறியது: 

திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 142 நூலகங்களில் 3,69,381 உறுப்பினர்கள் உள்ளனர். நகர்ப்புறங்களில் உள்ள நூலகங்களில் புத்தகங்களை எடுத்துச் செல்ல ஒரு புத்தகத்துக்கு ரூ.20-ம், ஆண்டு சந்தா ரூ.10-ம் வசூலிக்கப்படுகிறது.

இதேபோல ஊர்ப்புற நூலகங்களில் ஒரு புத்தகத்துக்கு ரூ.15-ம், ஆண்டு சந்தா ரூ.5-ம் வசூலிக்கப் படுகிறது. இந்த ஆண்டு மக்கள் மத்தியில் குறிப்பாக இளைய தலைமுறையினர் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் பொது நூலகத்துறை நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த சிறப்பு முகாமை நடத்த உத்தரவிட்டது. இதன்படி திருச்சி மாவட்டத்தில் 30,381 புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளோம்.

இந்த எண்ணிக்கை மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த சிறப்பு முகாமில் திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக முழுநேர கிளை நூலக அளவில் துறையூர் கிளை நூலகம் 1,427 உறுப்பினர்களையும், கிளை நூலக அளவில் அரியமங்கலம் கிளை நூலகம் 1,000 உறுப்பினர்களையும், ஊர்ப்புற நூலகங்கள் அளவில் பாப்பாக்குறிச்சி நூலகம் 481 உறுப்பினர்களையும் சேர்த்து, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளன. குறிப்பாக குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்ட வேண்டும். 

அதற்கு பெற்றோர் வீட்டிலேயே குழந்தைகளுக்கு படிக்கும் சூழலை உருவாக்கித் தர வேண்டும். பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் நூல்கள் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு முகாம்களை திருச்சி மாவட்ட மைய நூலகத்திலும், பிற நூலகங்களிலும் நடத்தி வருகிறோம் என்றார்.

- எஸ்.கல்யாணசுந்தரம் 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close