[X] Close

நீட் தேர்வு: சோதனை என்கிற பெயரில் மாணவிகளிடம் கெடுபிடி - 200-க்கும் மேற்பட்டோர் ஆப்சென்ட்


madurai-neet-exam

மதுரை வக்போர்டு கல்லூரியில் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் சாலையி்ல் காத்திருந்தனர்.

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 07 May, 2018 11:52 am
  • அ+ அ-

மதுரையில் நீட் தேர்வு எழுத வந்த இரு மாணவிகளின் முழுக்கை சட்டையை அதிகாரிகள் துண்டித்து கெடுபிடி செய்தனர். தாமதமாக வந்த ஒரு மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. மதுரையில் நடைபெற்ற இத்தேர்வில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆப்சென்ட் ஆயினர். 

மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இத்தேர்வு நேற்று நடந்தது. மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 11,800 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு மதுரையில் ஜெயின் வித்யாலயா, மகாத்மா பள்ளிகள், மதுரை கல்லூரி, வக்போர்டு கல்லூரி, யாதவா கல்லூரி, மன்னர் கல்லூரி உட்பட 20 மையங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது.

சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 500 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாகவும், 20 பேர் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும் செயல்பட்டனர். 6 பறக்கும் படையினரும் தேர்வை கண்காணித்தனர். 
மதுரை நரிமேட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரும், தேர்வு ஒருங்கிணைப்பாளருமான செல்வராஜ் பல்வேறு மையங்களுக்கு சென்று தேர்வை ஆய்வு செய்தார்.

விதிமுறைகள்

தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளிடம் சிபிஎஸ்இ விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. சோதனை என்ற முறையில் ஓரிரு மையத்தில் அதிகாரிகள் கெடுபிடியுடன் நடந்து கொண்டனர். உயரமான காலணி அணிந்து செல்லவும், மாணவியர் சடை அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டது.

மதுரை வக்போர்டு கல்லூரி மையத்தில் தேர்வு முடியும் வரை பெற்றோர் உள்ளே காத்திருக்க அனுமதி மறுத்ததால் சாலையில் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தேர்வு விதிமுறைகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இதை மீறி வந்தவர்களை தேர்வு அறைக்கு அனுப்பும்போது சோதனை செய்து சரி செய்த பிறகே அனுமதித்தோம்.200-க்கும் மேற்பட்டோர் ஆப்சென்ட் ஆயினர் என்றார்.

கடினம்

சத்யபிரியா (ராமேசுவரம்): வக்போர்டு கல்லூரி மையத்தில் தேர்வு எழுத அவசரத்தில் முழுக்கை சட்டை அணிந்து வந்தேன். அதிகாரிகள் சோதனையில் அரைக்கையாக வெட்டினர். இது எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தவில்லை. நன்றாகத் தேர்வு எழுதினேன். இயற்பியல் வினாக்கள் கடினமாக இருந்தன. பயாலஜியில் தெரிந்த வினாக்கள் அதிகம் இடம் பெற்றிருந்தன. 

நம்பிக்கை

சாருலதா (மதுரை): நன்றாக எழுதி உள்ளேன். கட்டாயம் மருத்துவ சீட் கிடைக்கும் என நம்புகிறேன். நான் எதிர்பார்த்த வினாக்களும் வந்தன. இயற்பியலில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என நீட் வினாக்கள் எனக்கு உணர்த்தியது.


சத்யபிரியா - சாருலதா - மாணிக்க கணபதி

கெடுபிடி

மாணிக்க கணபதி (தஞ்சாவூர்): நான் தஞ்சாவூரில் படித்தாலும், சொந்த ஊர் மதுரை என்பதால் மதுரை தேர்வு மையத்தை தேர்வு செய்தேன். வேதியியல், இயற்பியல் வினாக்கள் ஓரளவுக்கு தெரிந்தவையாக இருந்தன. சில வினாக்கள் ஆழமாக சிந்தித்து எழுதும் வகையில் இருந்தது. தேர்வு அறையில் கெடுபிடி அதிகமாக இருந்தது. கழிப்பறைக்கு சென்றாலும் ஒருவர் கூடவே வருகிறார். இது போன்ற நடவடிக்கை எரிச்சலை ஏற்படுத்தியது. 

காரில் வந்த நுழைவுச்சீட்டு

மேலூர் அருகில் உள்ள சூரக்குண்டுவைச் சேர்ந்த மாணவி டயானாவுக்கு பசுமலையில் உள்ள கல்லூரி தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் நுழைவுச் சீட்டை எடுத்துவர மறந்துவிட்டார். அங்கிருந்த கார் ஓட்டுநர் ஒருவரின் உதவியுடன் சூரக்குண்டு சென்று நுழைவுச் சீட்டை எடுத்துக்கொண்டு 9.28 மணிக்கு தேர்வு மையத்துக்கு வந்ததால் மாணவியை உள்ளே அனுமதித்தனர். இதற்காக ஓட்டுநர் பணம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரும்பிச் சென்ற மாணவி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த கபிதா என்ற மாணவிக்கு யாதவா கல்லூரி தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் காலை 9.35 மணிக்கு தேர்வு அறைக்கு வந்தபோது, அறை கண்காணிப்பாளர் அவரை திருப்பி அனுப்பினார். இதேபோல் மேலும் சில மையத்தில் தாமதமாக வந்தவர்களை அனுமதிக்க மறுத்தனர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close