[X] Close

பல தலைமுறையாக இருளில் வாழும் ஈரோடு மலைக் கிராமங்கள்: பிரதமரின் பெருமிதத்திற்குப் பின் வெளிச்சம் பெறுமா?


rural-electricity-shortage

கத்திரி மலை பள்ளி. (கோப்பு படம்)

  • kamadenu
  • Posted: 05 May, 2018 11:32 am
  • அ+ அ-

நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு தரப்பட்டு விட்டதாக பிரதமர் பெருமிதப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று மலைக் கிராமங்களுக்கு இதுவரை மின்வசதி சென்றடையாத நிலை தொடர்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளுக்குப் பின், நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் என்ற இலக்கை எட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரு நாட்களுக்கு முன் குறிப்பிட்டு இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு சுதந்திர தின உரையில், 1000 நாட்களுக்குள், நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து தரப்படும் என உறுதியளித்தேன். ஆனால், 988 நாட்களில் இந்தப்பணி முடிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து இருந்தார்.

ஆனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று மலைக் கிராமங்களுக்கு இதுவரை மின்சாரம் சென்றடையாத நிலை தொடர்கிறது. சத்தியமங்கலம் வட்டாரம் குத்தியாளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மல்லியம்மன் துர்க்கம் மலைக் கிராமத்தில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு இதுவரை மின்சார வசதி சென்று சேரவில்லை. 

அதே போல், அந்தியூர் வட்டாரம் பர்கூர் ஊராட்சியில் உள்ள கத்தரி மலைக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இங்கும் இதுவரை மின்சார வசதி சென்று சேரவில்லை. ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டாரம், தலமலை ஊராட்சிக்குட்பட்ட ராமர் அணை கிராமத்தில் 14 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. 

முறையான போக்குவரத்து வசதி இல்லாத இந்த பழங்குடியின கிராமங்களுக்கு, தனியார் தொண்டு நிறுவனங்கள், சூரிய ஒளி மின்சக்தி மூலம் தெருவிளக்குகளை அமைத்துக் கொடுத்தனர். ஆனால், அதுவும் நாளைடைவில் பழுதடைந்துள்ளது. இதனால், பல தலைமுறைகளாக இருள் வாழ்க்கையையே பழக்கப்படுத்திக் கொண்டு விட்டனர் இந்த கிராம மக்கள்.

மலைக் கிராமங்களில் பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வரும் சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.சி. நடராஜிடம் பேசியபோது, ‘இந்த மூன்று கிராம மக்களும் விவசாயத்தையே தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு போதுமான மருத்துவ வசதியோ, போக்குவரத்து வசதியோ கிடையாது. கத்தரி மலை கிராமத்தில் 8-ம் வகுப்பு வரையான பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 70 குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளியிலும், கிராமத்திலும் மின்சார வசதி இல்லாத நிலையில், இந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. பள்ளியின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட, ‘எல்சிடி புரெஜெக்டர்’ மின்வசதி இல்லாததால், இதுவரை பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதேபோல், மல்லியம்மன் துர்க்கம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களும் மின்வசதி இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார். 

கோபி மின்வாரிய செயற்பொறியாளரிடம் பேசியபோது, ‘இந்த மூன்று கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்குவதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, ஒப்பந்ததாரரிடம் பணி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த கிராமங்களுக்கு மின்வசதி வழங்கப்படும்’ என்றார். 

 

- எஸ்.கோவிந்தராஜ்

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close