[X] Close

வெயிலின் உக்கிரத்திலிருந்து மக்களை பாதுகாக்க போக்குவரத்து சிக்னல்களில் பந்தல்: சேலம் மாநகராட்சி சோதனை முயற்சி


sun-shade-in-signals

கோடை வெயிலின் உக்கிரத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில் சேலத்தில் நகரின் முக்கிய பகுதிகளில் மாநகராட்சி சார்பில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. ஆட்சியர் அலுவலக ரவுண்டானா சிக்னலில் பந்தல் அமைக்கும் பணி சுறுசுறுப்பாக நேற்று நடைபெற்றது.

  • kamadenu
  • Posted: 04 May, 2018 12:13 pm
  • அ+ அ-

கோடை காலம் உச்சக்கட்டதை எட்டி வரும் நிலையில் மாநகராட்சி சார்பில் சேலம் நகரின் போக்குவரத்து சிக்னல்களில் பந்தல் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிக்னலில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதுமே சேலம் மாவட்டத்தில் தான் வெயில் தனது முதல் சதத்தை பதிவு செய்தது. அத்துடன் இடையிடையே சில நாட்கள் தவிர மற்ற நாட்களில் தொடர்ந்து சதத்தை பதிவு செய்து கொண்டே இருக்கிறது கோடை வெயில். இதன் காரணமாக சேலம் மாநகர் உள்பட மாவட்டத்தின் பல இடங்களில் பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் சேலம் மாநகர போக்குவரத்து சிக்னல்களில் உச்சி வெயில் நேரங்களில் காத்திருக்கும்போது, வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். அதிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை சந்திப்பு, அஸ்தம்பட்டி சாலை சந்திப்பு, 5 ரோடு சாலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஒரு நிமிடம் வரை வாகன ஓட்டிகள் வெயிலில் காத்து நிற்கும் நிலை உள்ளது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாநகராட்சி சார்பில் போக்குவரத்து சிக்னல்களில் பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை சந்திப்பில் சிக்னலில் வாகன ஓட்டிகள் காத்து நிற்கும் பகுதியில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறியதாவது:

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் வருபவர்கள் சிக்னலில் காத்து நிற்கும்போது அவதிக்கு ஆளாகின்றனர். குழந்தைகளை வெயிலில் இருந்து பாதுகாக்க பெற்றோர் திணறிவிடுகின்றனர். சாலையை கடப்பதற்கு காத்து நிற்கும் பாதசாரிகளும் வெயிலில் காத்து நிற்கும்போது சிரமத்தை சந்திக்கின்றனர். 
எனவே, சிக்னல்களில் வாகனங்கள், பாதசாரிகள் காத்து நிற்கும் இடங்களில் பந்தல் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

மாநகர போக்குவரத்து காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை சந்திப்பில் பந்தல் அமைக்கப்படுகிறது. இதில் கிடைக்கும் பலனைப் பொறுத்து அடுத்தடுத்த சிக்னல்களில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பில் பந்தல் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close