[X] Close
 

வறட்சியில் கொளுத்தும் வெயிலால் தண்ணீர் தேடி அலையும் வன விலங்குகள்


summer-season-heat-wave-wild-animals-water

ராஜபாளையம் அருகே சாஸ்தாகோயில் வனப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் பருகும் காட்டெருமைகள்.

  • kamadenu
  • Posted: 03 May, 2018 13:17 pm
  • அ+ அ-

கொளுத்தும் கோடை வெயிலால் மேற்குத் தொடர்ச்சி மலையில் பல இடங்களில் வறட்சி காரணமாக வன விலங்குகள் தண்ணீரைத் தேடி அலைந்து வருகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் வரையிலான மேற்குத் தொடர்ச்சிமலை பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக, சிறுத்தை, யானை, மான், மிளா, காட்டெருமை, காட்டு மாடு, காட்டுப் பன்றி, செந்நாய், கரடி உள்ளிட்ட விலங்குகள் அதிகம் காணப்படுகின்றன. அதோடு சில அரியவகை பட்டாம்பூச்சிகளும் காணப்படுகின்றன.

கடந்த மாதம் முதல் வாரத்தில் கோடை வெயில் தொடங்கியபோது பரவலாக மழை பெய்தது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சிமலை பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார் கோயில் காட்டாறுகளிலும், சாஸ்தாகோயில் ஆறுகளிலும் நீர்வரத்து காணப்பட்டது. ஆனால், தொடர்ந்து அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கத்தாலும் குடிக்க தண்ணீர் கிடைக்காததாலும் வன விலங்குகள் தண்ணீரைத் தேடி அலைந்து வருகின்றன. குடிநீர் தேடி அடிவாரப் பகுதிக்கு வரும் வன விலங்குகள் தோட்டங்கள், பண்ணைகளில் உள்ள மரங்களையும் விட்டு வைப்பதில்லை. 


ராஜபாளையம் அருகே தண்ணீர் அருந்த வரும் புள்ளி மான்கள்

பல இடங்களில் மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்துவிடும் போதும், சாலையைக் கடக்கும்போதும் அடிபட்டு இறப்பதும் வழக்கமாகி வருகிறது. வன விலங்குகள் உயிர் சேதத்தையும், விவசாயிகளின் பயிர் சேதத்தையும் தடுக்கும் வகையில் மேற்குத் தொடர்ச்சி மலை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதிகளில் வனத்துறை சார்பில் திருவில்லிபுத்தூர் அம்மன்கோயில், புதுப்பட்டி, குன்னூர், ரெங்காதீர்த்தம், சாப்டூர், மல்லபுரம், வத்திராயிருப்பு பகுதியில் தொப்பிமலை, ராஜபாளையம் பகுதியில் அம்மன்கோயில், வாலைக்குளம், சப்பாணி பரம்பு, அய்யனார்கோயில், தேவியாறு பகுதிகளிலும் பிள்ளையார் நத்தம், தொட்டியபட்டி பகுதிகளிலும் தற்போது வன விலங்குகளுக்கான குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள நீர்த் தேக்கங்களில் ஓரளவு தண்ணீர் உள்ளது. அடர்ந்த வனப்பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில் தண்ணீர் இல்லாததால் அடிவாரப் பகுதிகளுக்கு வனவிலங்குகள் வருகின்றன.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் தற்போது வறட்சி நிலவுகிறது. விலங்குகள் தண்ணீருக்காக தற்போது அடிவாரப் பகுதியை நோக்கி வருகின்றன. குறிப்பாக, யானைகள், காட்டெருமைகள், மான்கள், செந்நாய்கள், வரையாடுகள் அதிகம் வருகின்றன. அடிவாரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் அருந்தும் வன விலங்குகள் குறிப்பிட்ட பரப்பளவிலேயே சுற்றி வருவதாகத் தெரிவித்தனர்.

- இ. மணிகண்டன்

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close