[X] Close

தேர்தல் பறக்கும் படை பெயரில் ரூ.1 கோடி வழிப்பறி: கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை


election-flying-force

  • kamadenu
  • Posted: 17 Mar, 2019 11:45 am
  • அ+ அ-

தேர்தல் பறக்கும் படை பெயரில் கட்டுமான நிறுவன மேலாளரிடம் ரூ.1 கோடியே 7 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை கைது செய்ய போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. உதயகுமார் என்பவர் இதில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தொழில் விவகாரம் தொடர்பாக சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திலிருந்து ரூ.1 கோடியே 7 லட்சத்தை கடனாக பெற்றுக் கொண்டு மீண்டும் தண்டலத்துக்கு சக ஊழியர்களான இளங்கோ, மாசிலாமணி, வேணுகோபாலுடன் 2 நாட்களுக்கு முன்னர் காரில் சென்று கொண்டிருந்தார்.

சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகே சென்றபோது மற்றொரு காரில் வந்த சிலர்,உதயகுமாரின் காரை மடக்கியுள்ளனர். தங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் என கூறி காரை சோதனையிட்டுள்ளனர். பின்னர், காரிலிருந்த ரூ.1 கோடியே 7 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து உதயகுமாரை மட்டும் அவர்களின் காரில் ஏற்றிக்கொண்டு விசாரணை என்ற பெயரில் பூந்தமல்லிக்கு கடத்தி சென்றுள்ளனர். போகும் வழியிலேயே உதயகுமார் மீது தாக்குதல் நடத்தி காரிலிருந்து கீழே இறக்கி விட்டு அவர்கள் பணத்துடன் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உதயகுமார், இதுகுறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையர் சங்கரலிங்கம் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, புகாரின் உண்மைத் தன்மை குறித்து உதயகுமார் தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close