[X] Close

ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையில் சாதனை டாக்டர் ஆர்.வெங்கடசாமிக்கு பத்மஸ்ரீ விருது: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்


padmashri-award

ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.வெங்கடசாமிக்கு பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராஷ்டிரபதி பவனில் வழங்கினார்.

  • kamadenu
  • Posted: 17 Mar, 2019 11:14 am
  • அ+ அ-

ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த ஆர்.வெங்கடசாமிக்கு பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார்.

இந்தியாவில் முதல் முறையாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மின்சார விபத்தில் தனது கைகளை இழந்த இளைஞருக்கு, மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து தானமாக பெற்ற கைகளை பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு முக்கியகாரணமாக ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.வெங்கடசாமி திகழ்கிறார். இந்திய அளவில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையின் தந்தையாக போற்றப்படும் இவருக்கு பத்மஸ்ரீ விருதை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார். பத்மஸ்ரீ விருதுக்கு விண்ணப்பிக்காமலேயே, இவ்விருதை இவர்பெற்றிருப்பது தமிழகத்துக்கு கிடைத்த பெருமையாகும்.

பத்மஸ்ரீ விருதுபெற்ற ஆர்.வெங்கடசாமி, விருதுநகர் மாவட்டம் கொத்தநேரி கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர். கடின முயற்சியால் மருத்துவத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் தனியாக ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பற்றியும் படித்து முடித்தார். 1971-ம் ஆண்டில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவைத் தொடங்கினார். கடந்த1976-ம் ஆண்டு கைக்கு மட்டும் தனியாக சிகிச்சை பிரிவை தொடங்கி பலரின் கைகளை காப்பாற்றியுள்ளார். தொடர்ந்து ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பட்டயப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பையும் தொடங்கி, படிப்படியாக இந்த சிகிச்சைப் பிரிவை தனித்துறையாக மாற்றினார்.

1991-ம் ஆண்டு ஓய்வுபெற்ற இவர், 1.5 லட்சம் பேருக்கு மேல்சிகிச்சை, 1,000-க்கும் அதிகமான நுண் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். தமிழக அரசின் காமராஜர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்போலோ பர்ஸ்ட் மெட் மருத்துவமனையில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை தலைவராக ஆர்.வெங்கடசாமி உள்ளார். நுண் அறுவை சிகிச்சைக்கென தனி சங்கத்தையும் நடத்தி வருகிறார். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்தின் தலைவராகவும் உள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close