[X] Close

போரூர் ஏடிஎம்மில் 10 லட்ச ரூபாய் கொள்ளை: 2 நைஜிரிய இளைஞர்கள் கைது


  • முத்தலீப்
  • Posted: 16 Mar, 2019 18:32 pm
  • அ+ அ-

சென்னை வடபழனியில் வங்கிகளின் ஏடிஎம்களுக்கு பணம் நிரப்பும் தனியார் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி  மதியம் 35 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம்மில் நிரப்புவதற்காக  தேவராஜ், முரளி என்ற இரண்டு ஊழியர்கள்  சென்றனர். 

வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், காட்டுப்பாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம்களில் பணத்தை நிரப்பியப்பின் ரூ14 லட்சம் பணத்தை மூவேந்தர் நகர் பகுதியில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்மில் நிரப்பிக் கொண்டிருந்தனர்.

பணத்தை நிரப்பும்போது ஏடிஎம் மையத்தின் ஷட்டரை அடைக்காமல் கவனக்குறைவாக இருந்துள்ளனர்.  உடன் துப்பாக்கி ஏந்திய காவலாளியும் இல்லை. ரூ.4 லட்சத்தை ஏடிஎம் எந்திரத்திற்குள் வைத்த நிலையில் ஏடிஎம் மையத்திற்குள் வந்த இருவர் அவர்களை தாக்கினர்.

ஹெல்மெட் அணிந்து, கையுறை அணிந்து பணத்தை தரும்படி மிரட்டிய  அவர்கள் பணம் தர மறுத்த ஊழியர் தேவராஜின் கையை கத்தியால் வெட்டி விட்டு ரூ.10 லட்சம் பணப்பெட்டியை பறித்துச் சென்றனர். இந்த காட்சிகள் அனைத்து அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.

கொள்ளை குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தனர். பணம் நிரப்பிய ஊழியர்களையும் போலீஸார் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து விசாரித்தனர்.

மதுரவாயல் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். எஸ்.ஐ. செல்லதுரை, காவலர் வினோத் தலைமையிலான தனிப்படை பல்வேறு விசாரணைகளை நடத்தினர், அதில் அருகிலுள்ள கடைக்காரர்கள் சொன்ன தகவல் நல்ல பலனை தந்தது.

கொள்ளையடிக்க வந்தவர்கள் ஆங்கிலத்தில் பேசினர், அது நமது வழக்கமான ஆங்கிலம் போல் இல்லை, அவர்கள் தோற்றம், கொள்ளையடித்த ஸ்டைல் ஆங்கிலப்படத்தின் காட்சிப்போல் இருந்தது என தெரிவித்தனர்.

கொள்ளையர்கள் ஹெல்மட் அணிந்திருந்ததால் அடையாளம் காண முடியவில்லை, ஆனால் வாகன எண்ணை சோதித்தபோது அது அப்பகுதியில் உள்ள ஒருவரின் மோட்டார் சைக்கிள் என தெரியவந்தது. அவர் மோட்டார் சைக்கிளை வாடகைக்கு விட்டு வந்துள்ளார்.

கொள்ளையர்கள் இருவரும் அவரிடம் வாடகைக்கு மோட்டார் சைக்கிளை எடுத்துள்ளனர் என்பது தெரியவந்தது, பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த அகோமி என்கிற நைஜிரியர் என்பது தெரிய வருகிறது.

அங்கு அதிரடியாக போலீஸார் நுழைந்து சோதனையிட அகோமி தான் கொள்ளையடிக்கவில்லை தனக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை என சாதித்துள்ளார். அப்போது அங்கிருந்த பைகள், ஹெல்மட் உள்ளிட்டவற்றை காட்டி போலீஸார் விசாரிக்க அது தனது நண்பனுடையது அவர் கர்நாடக மாநிலம் ஹசாரேவில் தங்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அகோமியை போலீஸ் பிடியில் வைத்த போலீஸார், நண்பன் பெரைலை தேடி போலீஸார் மைசூர் சென்றனர், ஆனால் மைசூரில் அந்த விலாசத்தில் பெரைல் இல்லை. பின்னர் அவரது போன் காலை வைத்து ட்ரேஸ் செய்ததில் ஹசாரே எனும் இடத்தில் தனது காதலியுடன் பெரைல் தங்கியிருப்பது தெரியவந்தது.

அங்குச் சென்ற போலீஸார் அவரை பிடித்து விசாரித்துள்ளனர், அப்போது அவர் தானும் தனது நண்பர் அகோமியும் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டோம் என ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்க பயன்படுத்திய பொருட்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

கொள்ளையடித்த பணம் ரூ 10 லட்சத்தை செலவழித்துவிட்டதாக அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். நைஜிரியாவைச் சேர்ந்த அகோமி இண்டர்நேஷனல் மெரைண்டைனில் படித்து வேலையில்லாமல் சுற்றிவருகிறார். பெரைல் நைஜிரியாவைச் சேர்ந்தவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close