[X] Close

உட்கட்சிப் பூசலை சமாளிக்க முடியாமல் மதுரையை மார்க்சிஸ்ட்டுக்கு தாரைவார்த்த திமுக


to-deal-with-internal-conflict

செ.ராமச்சந்திரன்

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 16:54 pm
  • அ+ அ-

மதுரை மக்களவைத் தொகுதியை கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு திமுக தந்துவிட்டதால் அக்கட்சி தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர். ஆனால், இதை நிர்வாகிகள் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததால் கூட்டணிக் கட்சிக்காக வேலை செய்யத் தயாராகிவிட்டனர். திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆரம்பம் முதலே திமுக தலைமை, மதுரையில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. கட்சித் தொண்டர்கள் திமுகதான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினாலும் நிர்வாகிகள் மட்டத்தில் ஆர்வம் இல்லை.

உட்கட்சி பூசல், மு.க.அழகிரியின் குடைச்சல் போன்றவற்றால் திமுக தலைமை, கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரையை ஒதுக்கியதாக கூறப்படுகிறது. முன்னாள் மேயர் செ.ராமச்சந்திரன் மதுரை தொகுதியில் போட்டியிட விருப்பப்பட்டார். அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், சமீபத்தில் ஸ்டாலின் பங்கேற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு வந்து கட்சியில் மீண்டும் ‘ரீ எண்ட்ரி’ கொடுத்தார். ஆனால், செ.ராமச்சந்திரனை மதுரை தொகுதியில் போட்டியிட வைக்க மாநகர திமுகவினருக்கு பெரியளவில் விருப்பமில்லாததால் கட்சித் தலைமை அவரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அவருக்கு இடைத்தேர்தலில், அதுவும் சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிட ஆர்வம் இல்லை. அதனால், திமுக தலைமை மதுரையை கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட்டுக்கு ஒதுக்கியது. மதுரை தொகுதி நேற்று மார்க்சிஸ்ட் கட்சிக்கு அறிவித்த வேகத்தில் அந்தக் கட்சியும் நேற்று மதியம் உடனடியாக சு.வெங்கடேசனை வேட்பாளராக அறிவித்தது. சு.வெங்கடே சனுக்கும், திமுகவினருக்கும் பெரியளவில் முரண்பாடுகள் ஏதும் இல்லை என்பதால் தேர்தல் பணியில் எந்த பாதிப்பும் வர வாய்ப்பில்லை. அதிமுக போட்டியிட்டால் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்யும் என்று கூறப்படுகிறது. அதையும் பிரச்சாரத்தில் முறியடிக்க மார்க்சிஸ்ட் வலுவான பிரச்சாரக் குழுவையும் அமைத்துள்ளது.

விரைவில் சு.வெங்கடேசன், திமுக தலைமையிலான உள்ளூர் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கோரிய உடன் பிரச்சாரத்தையும் தொடங்க உள்ளார். இதுகுறித்து மதுரை திமுக வினர் கூறுகையில், ‘‘சில நேரங்களில் சில விருப்பமில்லாத முடிவுகளை கட்சித் தலைமை எடுக்கத்தான் வேண்டியதிருக்கும். மதுரையில் திமுக போட்டி யிடாததால் தொண்டர்களுக்கு கவலைதான். மதுரை கூட்டணிக் கட்சிக்குத்தான் என்பது முன்பே தெரியும். அதனால், எங்களுக்கு பெரிய அதிர்ச்சி ஒன்றும் இல்லை. கூட்டணிக் கட்சிக்காக உழைக்கத் தயாராகிவிட்டோம்’’ என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close