[X] Close

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது: குழந்தைகளை தேடி செல்லும் ஆசிரியர்கள்


government-school-admissions

  • kamadenu
  • Posted: 24 Apr, 2018 11:44 am
  • அ+ அ-

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதால், பணியிடங்களை தக்க வைக்கவும், பள்ளிகள் மூடப்படுவதை தடுக்கவும் ஆசிரியர்கள், குழந்தைகளை தேடிச் சென்று பள்ளியில் சேர வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 5,000-க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்க பள்ளி கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. 

ஆனால், பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. 10 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் 3 ஆசிரியர்களும், 50 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் 5 ஆசிரியர்களும் பணியில் உள்ளனர். இப்படி, மாணவர் விகிதத்தை விட, ஆசிரியர் விகிதம் அதிகமாக இருப்பதால் அரசு நிதி விரயமாவதாகக் கூறப்படுகிறது. இதை தடுக்க, பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் என்ற விதியின் கீழ், இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதனால், பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் ரத்து செய்யப்படுகிறது. அப்பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்படுகிறது.

காரணம் என்ன?

மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் தற்போது அதிக எண்ணிக்கையில் பெருகிவிட்டன. கிராமப்புறங்களிலும் மெட்ரிக் பள்ளிகள் புற்றீசல் போல் பெருகிவிட்டதால், அப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கவே பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்ட ஆங்கிலப் பிரிவு வகுப்புகளுக்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

மாணவர் சேர்க்கை குறைய ஆரம்பித்துள்ளதால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் அதிகரித்துள்ளனர். அந்த உபரி ஆசிரியர் பணியிடங்களை தக்க வைக்க பள்ளி நிர்வாகங்கள் போராடி வருகின்றன.

குழந்தைகளை தேடி..

நடப்பாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தற்போதிலிருந்தே அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி நிர்வாகங்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது. ஆனால், பல பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு இன்னும் விடுமுறை அளிக்கப்படவில்லை. வரும் 30-ம் தேதி வரை பணிக்கு வருமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ஒரு ஆசிரியர் 5 முதல் 10 குழந்தைகளையாவது இந்த கோடை விடுமுறையில் பள்ளிகளில் சேர்க்க முயற்சிக்க வேண்டும் என்று அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் சார்பில் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தங்கள் பள்ளி அமைந்துள்ள பகுதியிலும், சுற்றுவட்டாரத்திலும் நேரடியாக வீடுகளுக்குச் சென்று, குழந்தைகள் இருந்தால், அவர்களை பள்ளியில் சேர்க்குமாறு பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை பொறுத்தவரையில் பள்ளிகளை தேடி குழந்தைகள் வந்த காலம்போய், தற்போது அவர்களை தேடி ஆசிரியர்கள் செல்லும் காலம் வந்துள்ளது.

இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை முற்றிலும் குறைவதாக கூறுவது சரியில்லை. நகர், கிராமப்புறங்களில் அதிக பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனால்தான் முன்புபோல் மாணவர்கள் சேர்க்கை இல்லை’’ என்றார். 

2 செட் சீருடைகள் இலவசம் 

அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்கள்கூட, நகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்கவே ஆசைப்படுகின்றனர். இதனால், கிராமப்புற பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது. தற்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், ஆசிரியர் பணியிடங்களை தக்க வைக்கவும் ஆண்டு விழாக்கள், விளையாட்டு விழாக்கள், இலக்கிய மன்றங்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது மிகவும் வரவேற்கவேண்டிய விஷயம்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த புதிதாக சேரும் மாணவர்களுக்கு இலவச பஸ் வசதியையும், வேன் வசதியையும் நிர்வாகத்தினரே ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.

2 செட் சீருடைகளையும் இலவசமாக கொடுக்கின்றனர். அதனால், அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அடுத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைக்கல்வி படிக்க அருகில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு செல்லத்தொடங்குகின்றனர்.

- ஒய்.ஆண்டனி செல்வராஜ்

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close