[X] Close

ராகுல் பிரச்சார கூட்டத்தில் குடிநீர் கிடைக்காமல் தவித்த பெண்கள்


rahul-s-campaign-meeting

நாகர்கோவிலில் ராகுல்காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டத்தின்போது வெயில் தாளாமல் சேலைத்தலைப்பை குடையாக்கிக் கொண்ட பெண்கள்.

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 16:42 pm
  • அ+ அ-

நாகர்கோவிலில் சுட்டெரித்த வெயிலில் நடைபெற்ற திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பிரச்சார கூட்டத்தில் பெண்கள், தொண்டர்கள், முதியோர் உள்ளிட்டோர் குடிநீர் கிடைக்காமல் பெரும் சிரமம் அடைந்தனர்.

பிற்பகல் 2 மணிக்கு சுட்டெரித்த வெயிலில் மைதானத்தில் போடப்பட்டி ருந்த நாற்காலிகளில் அமர கூட்டம் வரவில்லை. கட்சி தலைவர்கள் ஒலிபெருக்கியில் அறிவித்து மக்களை அங்கு வந்து அமருமாறு தெரிவித்துகொண்டிருந்தனர். பிற்பகல் 3 மணிக்கு பிறகே நாற்காலிகள் நிரம்பின. ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த நிலையில் அவர்களுக்கான குடிநீர் வசதியை சரிவர ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை. பலர் தண்ணீருக்கு தவியாய் தவித்தனர். குடிநீருக்கு ஏற்பாடு செய்யுமாறு சைகை மூலம் மேடையில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு பலர் தெரிவித்தும் பலனில்லை. சீருடையில் இருந்த காங்கிரஸ் தொண்டர்களிடம் நேரில் தெரிவித்தும், அவர்கள் கைவிரித்து சென்றதால் பலர் குடிநீருக்கு சிரமப்பட்டனர்.

சுட்டெரித்த வெயிலால் பெண்கள் பலர் தங்கள் சேலை முந்தானையை தலையில் போர்த்தியிருந்தனர். சிலர் அறிவிப்பு அட்டைகளையும், கட்சி கொடிகளையும் தலையில் போர்த்தியிருந்தனர். இன்னும் சிலர் நாற்காலிகளை தலைக்குமேல் குடைபோல் தூக்கி வைத்திருந்தனர். தொண்டர்களையும், பொதுமக்களையும் கூட்ட மைதானத்துக்கு வரவழைக்க காங்கிரஸ் புகழ்பாடும் மேடை கச்சேரி, கரகாட்டம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், வெயில் கொடுமைக்கு மத்தியில் அதை பலரும் ரசிக்கவில்லை.

மேடையிலிருந்து சிறிது தூரத்தில் இருந்த விவிஐபி காலரியில் இருந்தவர்கள் சிலர், கூட்டணி கட்சி தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது உரக்க குரல் எழுப்பி கூச்சல் குழப்பத்தை உருவாக்கினர். திருநெல்வேலியிலிருந்து வந்திருந்த சிலர் வேண்டும... வேண்டும்.. திருநெல்வேலி வேண்டும் என்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். ‘மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும்- திருநெல்வேலி மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி’ என்ற வாசகங்களுடன்கூடிய காகிதங்களையும் காண்பித்து கொண்டிருந்தனர்.

தங்கபாலு திணறல்

 ராகுல்காந்தியின் ஆங்கில உரையை தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தமிழில் மொழி பெயர்த்தபோது திணறினார். ராகுல்காந்தியின் அதிவேக ஆங்கில உரையை உடனுக்குடன் சரியாக தமிழில் தங்கபாலு மொழி பெயர்க்காதது குறித்து கூட்டத்தில் பங்கேற்றவர்களே ஆட்சேபத்தை வெளிக்காட்டினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close