[X] Close

அரசு இ-சேவை மையங்களில் சர்வர் கோளாறால் பணிகள் பாதிப்பு: சான்றுகளை பெற முடியாமல் பொதுமக்கள் அவதி


eseva-corner

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 10:36 am
  • அ+ அ-

அரசு மின்னாளுமை முகமை சர்வரில் ஏற்பட்டுள்ள கோளாறுகாரணமாக அரசு இ-சேவை மையங்களில் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களைப் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

அரசு தகவல் தொழில்நுட்பத் துறையின் மின்னாளுமை முகமை சார்பில் அரசு கேபிள் டிவி நிறுவனம், கூட்டுறவுத் துறை என பல்வேறு துறைகளுக்கு அரசு இ-சேவை மையங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 558 இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் வழங்கும் சான்றுகளைப் பெறவும்,குடும்ப அட்டை மற்றும் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் போன்றவற்றுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட ஆன்லைன் சேவைகள் கட்டண அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.

கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் முதல்வகுப்புக்கான மாணவர் சேர்க்கை, தனியார் பள்ளிகளில் மழலை வகுப்புக்கான மாணவர் சேர்க்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கு ஜாதிச் சான்று, இருப்பிடச் சான்றுஉள்ளிட்டவை பெற வேண்டியுள்ளன.

அடுத்தடுத்த மாதங்களில் 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்வுகள் வெளியாக உள்ள நிலையில், அவர்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்று போன்றவற்றைப் பெற வேண்டியுள்ளது. இதனால் இ-சேவை மையங்களைப் பொருத்தவரை மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பணி அதிகமாக இருக்கும். எனவே இக்காலங்களில் சர்வரின் வேகம் குறைவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டு இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் இருப்பதற்காக அரசு மின்னாளுமை முகமை சார்பில் சர்வர் சீரமைக்கப்பட்டது. இருப்பினும் சர்வர் கோளாறு காரணமாக கடந்த 13 நாட்களாக இ-சேவை மையப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு சான்றுகளைப் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இதுதொடர்பாக அரசு மின்னாளுமை திட்ட அதிகாரிகள் கூறும்போது, ‘‘இ-சேவை மையப் பணிகள் முழுவதுமாக முடங்கவில்லை. 10 விநாடிகளில் முடியக்கூடிய பணிகள், 2 நிமிடங்கள் வரை ஆகின்றன. அதற்கான காரணங்களை ஐஐடி வல்லுநர்கள் மூலமாக ஆராய்ந்து வருகிறோம். ஓரிரு தினங்களில் இதற்கு தீர்வு காணப்படும்” என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close