[X] Close

காதலர்களை கொடூரமாக கொலை செய்து பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு தூக்குதண்டனை விதித்தது சரியே: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


chennai-highcourt

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 10:33 am
  • அ+ அ-

தேனி மாவட்டம் சுருளி அருவி பகுதியில் காதலர்களை கொடூரமாக கொலை செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபருக்கு தூக்கு தண்டனை விதித்தது சரியானதுதான் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சுருளி அருவி பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு காதலர்களான அரசு கல்லூரி மாணவர் எழில் முதல்வன் மற்றும் பிஎட் கல்லூரி மாணவி கஸ்தூரி ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு 5 நாட்களுக்குப் பிறகு உடல் சிதைந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்ததில், ‘கைலாசநாதர் குகை கோயிலுக்கு செல்லும் வனப்பகுதியில் காதலர்கள் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது, அங்கு சென்ற கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த கட்டவெள்ளை என்ற திவாகர் என்பவர் அரிவாளைக் காட்டி மிரட்டி அவர்களிடம் நகை மற்றும் பணத்தைக் கேட்டுள்ளார். எழில்முதல்வன் கொடுக்க மறுக்கவே முதலில் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

கஸ்தூரி அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்க, அவரை துரத்திச் சென்ற திவாகர், அவரைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்தார்’ என்று தெரியவந்தது.

இந்த இரட்டைக் கொலை வழக்கை விசாரித்த தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம், கடந்த 2018 மார்ச்சில் குற்றம் சாட்டப்பட்ட திவாகருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தீர்ப்பை உறுதி செய்யக் கோரி

இந்த தீர்ப்பை உறுதி செய்யக் கோரி தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் , உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அனுப்பியது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மாநில தலைமைஅரசு குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, குற்றவாளியான திவாகர் கொடூரமான கொலைக் குற்றத்தில் ஈடுபட்டுஉள்ளார். காதலியின் கண்முன்னே காதலனை கொலை செய்துவிட்டு, பின்னர் அந்த இளம்பெண்ணையும் கை, கால்களை வெட்டி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இதை அரசு தரப்பு சாட்சியங்கள் சரியாக நிரூபித்துள்ளன என ஆதாரங்களுடன் வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதிகுறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.

இந்நிலையில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘‘இந்த வழக்கில் குற்றவாளியான திவாகருக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து சரியான தீர்ப்பைத்தான் பிறப்பித்துள்ளது. மக்களின் கருத்து ஒருபுறம் இதுபோன்ற கொடூர குற்றவாளிகள் மீது கொஞ்சமும் கரிசனம் காட்டக்கூடாது என பொதுமக்கள் கருதுகின்றனர். அதேநேரம் இன்னொருபுறம் தூக்கு தண்டனையே வழங்கக்கூடாது எனவும் குரல்கள் எழுப்பப்படுகின்றன. ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தமட்டில், இத்தகைய கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை நாங்களும் உறுதி செய்கிறோம்’ என தீர்ப்பளித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close