[X] Close

அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை; தொகுதி பட்டியல் விரைவில் வரும் என ஓபிஎஸ் தகவல்


admk

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 10:26 am
  • அ+ அ-

தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினர். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பட்டியில் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக - 7, பாஜக - 5, தேமுதிக- 4, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

தொகுதிப் பங்கீடு முடிந்தாலும் எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள்என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்றுநடந்தது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் மற்றும் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாமக தலைவர் ஜி.கே.மணி, மாநில இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மூத்த தலைவர் ஞானதேசிகன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், புதிய தமிழகம் கட்சி சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசும்போது, ‘‘தமிழகத்தில் சக்தி வாய்ந்த மெகா கூட்டணி அமைந்துள்ளது. மக்களுக்கான பல நல்ல திட்டங்களை ஜெயலலிதா கொடுத்துள்ளார். அவர் இல்லாததை ஒரு வெற்றிடமாகவே கருதுகிறேன். இந்தக் கூட்டணி வெற்றி பெறுவது, நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைவரும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும்’’ என்றார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்றார்.

தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், சிதம்பரம், நாகை, மயிலாடுதுறை, மதுரை, தேனி, நெல்லை தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாமகவுக்கு மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கடலூர் தொகுதிகளும், பாஜகவுக்கு கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகளும், தேமுதிகவுக்கு வடசென்னை, திருச்சி, விருதுநகர், கள்ளக்குறிச்சி தொகுதிகளும் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. என்.ஆர்.காங்கிரஸுக்கு புதுச்சேரி, புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி, புதிய நீதிக் கட்சிக்கு வேலூர், தமாகாவுக்கு தஞ்சை தொகுதிகள் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close