[X] Close

பாலியல் வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடக்கம்: விரைவில் முடிக்கப்படும் என ஐஜி தகவல்


pollachi-cbcid-issue

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி காவல்துறை தலைவர் ஸ்ரீதர், காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன். படம் : ஜெ.மனோகரன்.

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 10:13 am
  • அ+ அ-

பாலியல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணையை தொடங்கினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 19 வயது மாணவியிடம் முகநூல் மூலம் பழகி, பாலியல் தொல்லை தந்து அதை வீடியோவாக பதிவு செய்ததாக, எம்.ஜி.

ஆர் நகரைச் சேர்ந்த சபரிராஜன் (25), அவரது நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தவிர, இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த பார் நாகராஜ், செந்தில், பாபு, வசந்த் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மணிகண்டன் என்பரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் கோவை மாவட்ட போலீஸாரிடம் இருந்து சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. தவிர, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவும் அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, சிபிசிஐடி போலீஸார் நேற்று முறைப்படி வழக்கு விசாரணையைத் தொடங்கினர். சிபிசிஐடி காவல் துறை தலைவர் ஸ்ரீதர், காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆகியோர் நேற்று காலை கோவை வந்தனர். போலீஸ் பயிற்சிக்கல்லூரி வளாகத்தில் உள்ள காவல் அதிகாரிகள் விருந்தினர் மாளிகையில் தங்கி விசாரணையை தொடங்கினர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன், பாலியல் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், சிபிசிஐடி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார். அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக சில சந்தேகங்களை சிபிசிஐடி அதிகாரிகள் கேட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் அங்கிருந்து சென்றார்.

அதன் பின்னர், சிபிசிஐடி காவல்துறை தலைவர் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறியது: கோவை மாவட்ட போலீஸார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்துள்ளனர். அவற்றை வைத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து வித கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். யார், யாருக்கு இதில் தொடர்பு உள்ளது என கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வழக்கு தொடர்பாக எத்தனை குற்றவாளிகள் உள்ளனர் என்பது தொடர்ந்து நடத்தப்படும் விசாரணையில்தான் தெரியவரும்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவர். விசாரணை அதிகாரியாக எஸ்.பி நிஷா பார்த்திபன் இருப்பார். இந்த வழக்கு விசாரணை விரைவாக முடிக்கப்படும். அதேசமயம், சிபிஐ கேட்டால் இந்த வழக்கு விசாரணை ஆவணங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். இவ்வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோக்களை திரும்பப் பெற ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவை வைத்தும் விசாரிக்கப்படும். இந்த வழக்கில் காவல்துறை விசாரணை சரியான பாதையில் சென்றுள்ளதா, தவறான பாதையில் சென்றுள்ளதா என்பதை விசாரணை முடிந்த பின்னரே சொல்ல முடியும். இதுதொடர்பாக மேலும் வரும் வீடியோக்களை வைத்தும் விசாரிக்கப்படும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close