[X] Close

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து- பள்ளிக்கல்வித் துறை உத்தரவு


jacto-geo

ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம் | கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 09:22 am
  • அ+ அ-

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை மறுஆய்வு செய்து மீண்டும் பணியமர்த்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 1,900 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், கடந்த ஜனவரி29-ம் தேதி இரவு காலக்கெடுவுக்கு பின் பணியில் சேர்ந்த 3,000 ஆசிரியர்கள் பணியிடம் மாற்றப்பட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெற பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டன.

இந்நிலையில் ஆசிரியர்கள்மீதான நடவடிக்கையை மறு ஆய்வுசெய்து மீண்டும் பணியமர்த்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், முதன்மை கல்விஅதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:ஜாக்டோ-ஜியோ அமைப்பின்கீழ் வேலைநிறுத்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட ஆசிரியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இப்போது மேல்நிலை வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் நடந்து வருகின்றன. மேலும் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விரைவில் தொடங்க உள்ளன. எனவே, மாணவர் நலன்கருதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும்பணியமர்த்துவது குறித்து மறுஆய்வு செய்து எடுக்கப்படவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதன்மை கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனை வரவேற்பதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்,ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல், அரசு ஊழியர்கள், பேராசிரியர்கள் மீதான நடவடிக்கையும் திரும்ப பெறப்பட உள்ளதாக தெரிகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close