[X] Close

காற்றின் அலைவரிசை கேட்கிறதா...!


air-frequency

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 12:22 pm
  • அ+ அ-

நவீன டிவி-க்கள், ஸ்மார்ட்போன் என தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், இன்றைக்கும் தொழிற்சாலைகளில், உழைப்பாளிகளின் களைப்பைப் போக்கும் உற்சாக டானிக் எஃப்.எம். ரேடியோக்கள்தான். "நாம பாட்டுக்கு நம்ம வேலையைச் செய்யலாம். ரேடியோவால் எந்த தொந்தரவும் இருக்காது" என்பதுதான் இதற்குக் காரணம். குறைந்த செலவில் லட்சக்கணக்கானோரிடம் தகவல்களைக்  கொண்டுசெல்ல இன்றும்  தவிர்க்க முடியாத சாதனமாக இருக்கிறது ரேடியோ.

தொலைத்தொடர்பு வசதி இல்லாத மலைக் கிராமங்களில் ரேடியோதான் ஒரே ஆறுதல். முன்பெல்லாம் கிரிக்கெட் போட்டிகளின்போது,  நேரடி ஒலிபரப்பைக் கேட்க ரேடியோ வைத்திருப்பவர்களைச் சுற்றி ஒரு பெரிய கூட்டமே சூழ்ந்திருக்கும். அந்த அளவுக்கு நம்மோடு ஒன்றியிருந்தது ரேடியோ.

ரேடியோ மூலம் தகவல்கள் ஒலிபரப்பப்படுவதை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2013-ல்  ஐக்கிய நாடுகள் சபை, பிப்ரவரி 13-ம் தேதியை உலக ரேடியோ தினமாக அறிவித்தது. இந்த நாளில்தான் 1946-ம் ஆண்டு `ஐக்கிய நாடுகள் ரேடியோ` தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“ரோடியோவை மார்கோனி கண்டுபிடித்த பிறகு, முதன்முதலில் சிற்றலை அலைவரிசையை (ஷார்ட் வேவ்) அமெரிக்க ராணுவம் பயன்படுத்தியது. உலகப் போர்களின்போது,  போர் நிலவரங்களை மக்களுக்குத் தெரிவிக்க வானொலிதான் பயன்பட்டது. வானொலி புகழ்பெற காரணமானவர்களில் ஒருவர் ஹிட்லர். களத்தில் போர் வீரர்கள் தோல்வியுடையும் சூழல் இருப்பதையறியும் அவர், "நம் வீரர்கள் வெற்றிபெற்றுவிட்டனர். இன்னும் சிலரைத்தான் வீழ்த்த வேண்டியிருக்கிறது" என்று ரேடியோ மூலம் வீரர்களை ஊக்குவித்து கொண்டேயிருப்பார். கள நிலவரம் அறியாத வீரர்கள், சக வீரர்கள் மற்ற இடங்களில் வெற்றிகொள்வதாக எண்ணி, ஊக்கத்துடன் போரிட்டு தோல்விச் சூழலிலிருந்து மீண்டு வருவர். இவ்வாறு,  போரின்போது வானொலியை சிறந்த கருவியாகப் பயன்படுத்தினார் ஹிட்லர்.

8,000 கிலோமீட்டர்...

எல்லைகள் கடந்து பயணிக்கும் ஆற்றல் வானொலி அலைகளுக்கு உண்டு. பண்பலை (எப்ஃஎம்) ஒலிபரப்பை 80 கிலோமீட்டர் தொலைவுவரை கேட்க முடியும். மத்திய அலையானது (மீடியம் வேவ்) அதன் சக்தியைப்பொருத்து 100 முதல் 1,500 கிலோமீட்டர் வரை பயணிக்கும். அகில இந்திய வானொலி இந்த அலைவரிசையில்தான் இன்னமும் ஒலிபரப்பாகிறது. சிற்றலை என்பது 1,000 முதல் 8,000 கிலோமீட்டர் வரை பயணிக்கும். தமிழகத்தில் சென்னை வானொலி இந்த அலைவரிசையில் ஒலிபரப்பாகிறது.

இயற்கை பேரிடரின்போது...

ரேடியோ என்றால் ஒருவர் பேசுவார், மற்றவர்கள் கேட்க மட்டுமே முடியும். ‘ஹாம் ரேடியோ’ எனில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளலாம். இன்றும் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் `ஹாம் ரேடியோ`க்களை இயக்கத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அங்கு இயற்கைச்  சீற்றங்களின்போது தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும்.

அப்போது, அவசரகால அறிவிப்புகளை தெரிவிக்க `ஹாம் ரேடியோ`க்கள் பயன்படுகின்றன. குறைந்தபட்சம் 150 முதல் அதிக பட்சம்  1,000 கிலோமீட்டர் வரை ஹாம் ரேடியோ மூலம் தகவல்களை பரிமாற முடியும்" என்றார் சென்னை பல்கலைக்கழக இதழியல் துறை உதவிப் பேராசிரியரும், ரேடியோ ஆர்வலருமான தங்க.ஜெய்சக்திவேல்.

"எப்போது உருவானது ரேடியோ மோகம்?" என்று கேட்டதற்கு, "1970-க்கு முன்புவரை இந்தியாவில் எஃப்.எம். இல்லை. வெளிநாட்டில் இருந்து யாரேனும் எஃப்.எம். ரேடியோவை வாங்கி வந்தால், அதை அதிசயமாக பார்க்கும் நிலைதான் இருந்தது. 1980-க்கு பிறகுதான் எஃப்.எம். ரேடியோ வளரத் தொடங்கியது. 2000-ம் ஆண்டு தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகு, எஃப்.எம். ரேடியோ பிரபலமானது. அதுவரை, அகில இந்திய வானொலியின் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள், செய்திகளை மட்டுமே நாம் கேட்டு வந்தோம்.

தற்போது இந்தியாவில் எஃப்.எம். ரேடியோக்களை மட்டுமே இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், சிற்றலை, மத்திய அலை வடிவங்கள் பிரபலமாக வில்லை" என்றார்.

“எஃப்.எம். ரேடியோ வைக் கேட்கும் நேயர்களின் எண்ணிக்கை கால மாற்றத்தால்  குறைந் திருக்கலாம். ஆனால், உலக வானொலி தொலைக் காட்சி கையேட்டு தகவல்படி,  சிற்றலை வானொலி நேயர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைய வில்லை. கேட்கும் வடிவம் மட்டுமே ரேடியோ பெட்டியிலிருந்து, செல்போ னுக்கு மாறி யிருக்கிறது" என்கின்றனர் ரேடியோ ஆர்வலர்கள்.

தமிழகத்துக்கு தனி இடம்

இந்தியாவின் முதல் பண்பலை வானொலியான  ‘எஃப்.எம். ரெயின்போ’ சென்னையில் 1977 ஜூலை 23-ம் தேதி தொடங்கப்பட்டது. அதேபோல, இந்தியாவின் முதல் உள்ளூர் வானொலி ஒலிபரப்பு 1984 அக்டோபர் 30-ம் தேதி நாகர்கோவிலில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதல் சமுதாய வானொலியான ‘அண்ணா எஃப்.எம்.’ சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும், மீனவர்களுக்கான முதல் வானொலியான `கடல் ஓசை` ராமேஸ்வரத்திலும் தொடங்கப்பட்டது கூடுதல் சிறப்பு.

கோவையில் ஒரு ரேடியோ காதலர்

கோவை கரும்புக்கடையைச் சேர்ந்தவர் அபுதாஹிர்(42). பக்கத்து வீடுகளில் வால்வு ரேடியோவில் பாடல்கள் இசைக்கப்படுவதை கேட்டு, எப்படியாவது சொந்தமாக ரேடியோவை வாங்க வேண்டும் என்று  எண்ணிய இவர், 12 வயதில் வேலைக்குச் சேர்ந்து, சம்பாதித்த பணத்தில் 1990-ல் பழைய இரும்பு வியாபாரியிடம் மரப்பெட்டியாலான

ரேடியோவை வாங்கியுள்ளார். ஆனால், அது ரேடியோ அல்ல, இரண்டாம் உலகப்போர் நேரத்தில் பயன்படுத்தப்

பட்ட `ஹாம் ரேடியோ` என்பது பின்புதான் அவருக்குத் தெரியவந்துள்ளது. பின்னர் ரேடியோவின் வகைகளையும், அதன் தொழில்நுட்பத்தையும், வரலாறையும் அறிந்து கொள்ள முற்பட்ட அவர்,  பலவகை ரேடியோக்களை சேகரிக்கவும்  தொடங்கினார்.

சுதந்திரத்துக்கு முன் தயாரிக்கப்பட்ட ரேடியோக்கள் உட்பட 160 வகையான ரேடியோக்களை சேகரித்து வைத்துள்ள அபுதாஹிர், "நூற்றாண்டு கடந்தும் ரேடியோ தொழில்நுட்பம் உயிர்ப்புடன் இருப்பது பெரிய விஷயம். அதில் இந்திய விஞ்ஞானி (ஜெகதீஸ் சந்திரபோஸ்) ஒருவருக்கும் பங்கு இருப்பதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். இதை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் இதுவரை 53 ரேடியோ கண்காட்சிகளை நடத்தியுள்ளேன்” என்றார்.

பாகிஸ்தானில் தமிழ் ரேடியோ

இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் தமிழில்  வானொலி ஒலிபரப்பு (சிற்றலையில்) உள்ளது. பாகிஸ்தானில், அந்நாட்டு அரசே தமிழ் வானொலி ஒலிபரப்பை தமிழர்களுக்காக ஒலிபரப்புவது ஆச்சரியத்துக்குரியது.

வெளிநாட்டு தமிழ் வானொலிகள் ஒவ்வோர் ஆண்டும் நேயர் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அதில், ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர். நாம் மறந்து போன விஷயங்களான இன்லேண்ட் லெட்டரையும், அஞ்சல் அட்டையையும் வானொலி நேயர்கள் இன்றளவும் பயன்படுத்தி வருகின்றனர். வானொலி நிலையங்களும், நேயர்களின் கருத்துகள் எழுத்துவடிவில் கிடைப்பதையே விரும்புகின்றன. இதனால், நேயர்களுக்கும், நிலையத்துக்குமான பிணைப்பு சிதையாமல் இருந்து வருகிறது.

படங்கள்: ஜெ.மனோகரன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close