[X] Close

சொந்த வனமா? யானைகள் முகாமா?- நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் ‘சின்னதம்பி’


chinnathambi

மடத்துக்குளம் அருகே விவசாய நிலத்தில் நேற்று உலாவந்த சின்னதம்பி.

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 12:14 pm
  • அ+ அ-

சொந்த வனத்தை தொலைத்து விட்டு அதை தேடி அலைந்து வரும் ‘சின்னதம்பி’ என்றழைக்கப்படும் காட்டு யானை, முகாம் யானையாக மாற்றப்படுமா என்பது நீதிமன்றம் அளிக்கப்போகும் தீர்ப்பையடுத்தே தெரியவரும் என சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை சின்ன தடாகம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவிய 2 காட்டு யானைகளுக்கு அப்பகுதி மக்கள் விநாயகன், சின்னதம்பி என பெயரிட்டு அழைக்கத்தொடங்கினர். இவ்விரு யானைகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் இரு யானைகளையும் பிடித்து வேறு வனப்பகுதியில் விடும் நடவடிக்கை வனத்துறையால் எடுக்கப்பட்டது.

அதில் முதல் நடவடிக்கையாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட விநாயகன் முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது. 2-வதாக பிடிபட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது சின்னதம்பி. அங்கிருந்து கிளம்பிய சின்னதம்பி கோட்டூர், அங்கலக்குறிச்சி, தீபாலபட்டி, சர்க்கரை ஆலை வளாகம் ஆகியவற்றைக் கடந்து தற்போது கண்ணாடிபுத்தூர் கிராமத்தில் முகாமிட்டுள்ளது. இதுவரை சுமார் 150 கி.மீ., தொலைவு கடந்துள்ளது. இடைப்பட்ட தொலைவில் 30-க்கும் மேற்பட்ட ஊர்களை கடந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை காட்டு யானையால் சேதம் குறித்து எந்த அறிக்கையும் வனத்துறையால் வெளியிடப்படவில்லை. ஆங்காங்கே உணவுக்காக மட்டுமே தென்னை, வாழை, கரும்பு ஆகியவற்றை உண்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 12 நாட்களாக உடுமலை பகுதியில் முகாமிட்டு வரும் சின்னதம்பியை முகாம் யானையாக மாற்றலாம் என வனத்துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கோவையில் யானைகளின் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளால் தான் காட்டு யானைகள் விவசாய நிலத்துக்குள் ஊடுருவியதாகவும், அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைகள் நிபுணர் அஜய்தேசாய் அளித்த அறிக்கையையும் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இன்று இவ்வழக்கில் முக்கிய தீர்ப்பு அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னதம்பி குறித்த வழக்கு உயர்நீதிமன்ற விசாரணையில் இருப்பதாலேயே விவசாய நிலத்தில் முகாமிட்டிருக்கும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டுவதா? முகாம் யானையாக மாற்றுவதா? என்ற குழப்பத்தில் வனத்துறையினர் இருந்து வருகின்றனர்.

பொதுமக்களுக்கு காட்சிப் பொருளாக மாறி வருவதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் யானை முகாமிட்டிருக்கும் பகுதிக்கு வருகின்றனர்.

இதுகுறித்து சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: காட்டு யானை சின்னதம்பி 15 ஆண்டுகளாக வசித்த தனது சொந்த வசிப்பிடத்தை தேடி அலைகிறது. அதன் கூட்டத்தை காணவே விரும்புகிறது. ஏற்கெனவே 50-க்கும் மேற்பட்ட கும்கி யானைகள் வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. கும்கி யானையாக உள்ள மாரியப்பன் முன்பு பலரை கொன்றுள்ளது. ஆனால் சின்னதம்பியால் இதுவரை மனித உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. குடியிருப்புகளை கடந்து 15 நாட்களுக்கும் மேலாக நடமாடிய போதும் சொத்துகளுக்கோ அல்லது மனித உயிர்களுக்கோ எவ்வித ஆபத்தும் நேரவில்லை. எதிர்காலத்தில் நடக்கப்போவதாக கூறப்படும் யூகங்களை விட்டு, அதனை அதன் வாழிடத்தில் விடவேண்டும். விவசாய நிலங்களைச் சுற்றி அகழி வெட்டுவதன் மூலம் பயிர்களை காக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close