[X] Close

மேல்முறையீட்டு மனுவில் தனி நீதிபதி குறித்து விமர்சனம் சட்டப் பல்கலை பொறுப்பு பதிவாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


review-of-a-separate-judge

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 09:45 am
  • அ+ அ-

மேல்முறையீட்டு மனுவில் தனி நீதிபதியை விமர்சித்த சட்டப் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அவரை நேரில் ஆஜராகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளராகப் பணியாற்றிய டி.சங்கர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்துஅவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணையின்போது, சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.எஸ்.என்.சாஸ்திரி, 32 பேராசிரியர்கள் ஆகியோருக்கு உரிய கல்வித் தகுதி இல்லை என்பது தெரியவந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “பல்கலை. துணைவேந்தர் மற்றும் 32 பேராசிரியர்களின் கல்வித் தகுதி குறித்து பதில் மனு தாக்கல் செய்யும் படி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவர், சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் 32 பேராசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

சொந்த விருப்பத்தின்படி..

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், சட்டப் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி மேல்முறையீடு செய்தார். அதில், “வழக்குக்கு சம்பந்தம் இல்லாமல், தன்னுடைய சொந்த விருப்பத்தின்படியும், திடீரென தன் எண்ணத்தைமாற்றியும் தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தபோது, மேல்முறையீட்டு மனுவில் மனுதாரர் தனி நீதிபதியை விமர்சித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்கில் யு.ஜி.சி. தலைவர் உள்ளிட்டோரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்து, அவர்களை பதில் அளிக்கும்படி தனி நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அதற்காக நீதிபதியை தேவையில்லாமல் விமர்சனம் செய்ய மனுதாரருக்கு உரிமை இல்லை.

இவ்வாறு விமர்சனம் செய்வது, தனி நீதிபதியை மட்டுமல்ல, நீதிமன்றத்தின் கண்ணியத்தையும் குறைத்து மதிப்பிடுவது போலாகும். எந்த ஒரு சூழ்நிலையிலும் உயர் நீதிமன்றத்தின் கவுரவத்தை காப்பாற்ற வேண்டும்.

விளக்கம் அளிக்க வேண்டும்

மேல்முறையீட்டு மனுவில், மனுதாரர் பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகள் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார். எனவே, வரும் 18-ம்தேதி அவர் நேரில்ஆஜராகி, அவர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யக்கூடாது? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

இதற்கான நோட்டீஸை, சட்டப் பல்கலைக் கழகப் பதிவாளர் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தியிடம் வழங்க சென்னை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நோட்டீஸ் வழங்கியது குறித்த அறிக்கையை வரும் 15-ம் தேதி நீதிமன்றத்தில் காவல் ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close