[X] Close

ரூ.1 கோடி மதிப்புள்ள சிலை கடத்தல் விவகாரம்: தலைமறைவாக இருந்தவர் சென்னையில் கைது


rs-1-crore-worth-idol

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 09:37 am
  • அ+ அ-

ரூ.1 கோடி மதிப்புள்ள சிலை திருடப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர்.

சென்னை கிண்டி அருகேஉள்ள ஈக்காட்டுத்தாங்கலில் இரும்பு பட்டறை ஒன்றில் தொன்மையான ரூ.1 கோடி மதிப்புள்ள முருகன் சிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடந்த டிசம்பர் 22-ம் தேதி தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி ஏ.ஜி.பொன்மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அவரது மேற்பார்வையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தொன்மையான முருகன் சிலையை மீட்டனர்.

போலீஸார் நடவடிக்கை

மேலும் இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சென்னையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள நெமிலியில் இருக்கும் ஒரு கோயிலில் இருந்து சிலை திருடப்பட்டது என்பதும், அந்தச் சிலையை சிவக்குமார், இஸ்மாயில் மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த முகேஷ், அரக்கோணத்தைச் சேர்ந்த தேசனடிகள் ஆகியோர் திருடி விற்பதற்கு முயற்சி செய்ததும் தெரிய வந்தது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முகேஷை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த முகேஷை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

பின்னர், அவர் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close