[X] Close

பாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலையை கண்டித்து கும்பகோணம், திருபுவனத்தில் கடையடைப்பு: தடையை மீறி ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது


pmk

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 09:09 am
  • அ+ அ-

திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்து கும்பகோணத்தில்நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. கும்பகோணம், நாகை, மன்னார்குடியில் அனுமதியின்றி ஊர்வலமாகச் செல்ல முயன்றவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ராமலிங்கம்(45), கடந்த 5-ம் தேதி இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, சர்புதீன், முகமது ரிஸ்வான், தவ்ஹித் பாட்சா, முகம்மது இப்ராஹீஸ் உட்பட 9 பேரை திருவிடைமருதூர் போலீஸார் கைது செய்ததுடன்,கொலையாளிகள் பயன்படுத்திய தாகக் கூறப்படும் காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதற்கிடையில், ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, விஸ்வ ஹிந்துபரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் நேற்று கடையடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி கும்பகோணம், திருபுவனம், திருவிடைமருதூர் பகுதிகளில் சுமார் 7 ஆயிரம் கடைகள் நேற்று மூடப்பட்டன.

கும்பகோணம் பகுதியில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின. கும்பகோணத்தில் பிப்.11-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு அனுமதியின்றி பொதுக்கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த தடைவிதிக்கப்பட்டு உள்ளதால், தடையை மீறி ஊர்வலமாகச் செல்வதை தடுப்பதற்காக தஞ்சாவூர் எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் கும்பகோணம் காந்தி பூங்கா மற்றும் திருபுவனத்தில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அனைத்து இந்து அமைப்புகள் சார்பில் பாஜக மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில் கும்பகோணம் மகாமகக் குளம் வீரசைவ மடத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு வந்தவர்களை நாகேஸ்வரன் கோயில் வடக்கு வீதியில் போலீஸார் தடுத்தனர். இதையடுத்து, ஊர்வலமாக வந்தவர்கள் கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல, திருபுவனத்தில் ராமலிங்கத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து தனது ஆதரவாளர்களுடன் வந்த இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் செட்டிமண்டபம் அருகே கைது செய்யப்பட்டார். 2 இடங்களிலும் 7 பெண்கள் உட்பட 140 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

நாகை, மயிலாடுதுறை

இதேபோல, தடையை மீறி நாகை அவுரித்திடலில் நேற்றும், நேற்று முன்தினமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் செழியன் உள்ளிட்ட இந்து முன்னணியினர், பாஜகவினர் 55 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல, மயிலாடுதுறையில் கண்டன ஊர்வலம் செல்ல முயன்ற 106 பேர் கைது செய்யப்பட்டனர். பாஜகவினர் வலியுறுத்தியதால் நேற்று மதியம் மயிலாடுதுறையில் கடைகள் அடைக்கப்பட்டன.

கருப்பு முருகானந்தம் கைது

இதேபோல, ராமலிங்கம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இருந்து மன்னார்குடி வழியாக திருபுவனம் நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்த பாஜக மாநிலச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் பேட்டை சிவா உள்ளிட்ட பாஜகவினர் 33 பேரை, மன்னார்குடி மேலப்பாலத்தில் தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close