[X] Close

ஆந்திராவுடனான பாலாறு நதி நீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும்: பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு


palar-river

பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டும் விவகாரம் குறித்து, பேரவையில் நேற்று உரையாற்றிய முதல்வர்பழனிசாமி.

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 08:35 am
  • அ+ அ-

ஆந்திராவுடனான பாலாறு நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ரத்தினக்குமார் எம்எல்ஏ, ‘ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் கே.பழனிசாமி அளித்த பதிலில் கூறியதாவது:

கடந்த 1892-ம் ஆண்டைய மதராஸ்-மைசூர் ஒப்பந்தப்படி அணை கட்டவோ நீரைத் தடுக்கவோ திருப்பவோ தேக்குவதற்கோ என எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.

சித்தூர் மாவட்டத்தில், குப்பம் எனும் பகுதியில், பாலாற்றின் குறுக்கே ஒரு அணையை ஆந்திரா அரசு கட்ட உள்ளதாக 4.1.2006 அன்று தகவல்கள் வெளிவந்தபோது, மறுநாளே முதல்வர் ஜெயலலிதா ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி, ஆந்திர அரசு அணைகட்டும் பணியினை மேற்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொண்டார்கள்.

இந்த விவகாரத்தில் ஆந்திர அரசு மற்றும் மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் வராதநிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் 10.2.2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அணைக்கட்டும் பணிகள் தடுக்கப்பட்டன. இந்த வழக்கில், தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு சாட்சியாளர்களின் குறுக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, உச்ச நீதிமன்றத்தால் இவ்வழக்கு ஜுலை 2019-ல்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் 7.5.2018 அன்று பாலாறு பிரச்சினை குறித்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியது. இதில் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் இசைவு பெறாமல் புதிய தடுப்பணைகளை கட்டுவதற்கு முனையக்கூடாது எனவும்இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு பிறப்பிக்கும் வரையில் ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை மேலும் உயர்த்தக்கூடாது எனவும் மத்திய நீர்வள ஆதாரத் துறை செயலாளர் இக்கூட்டத்தின் முடிவில் தெரிவித்தார்.

பாலாற்றின் குறுக்கேயுள்ள 21 தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்புப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், ஒரு மனு ஒன்றை 19.11.2018 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே மேலும் 30 புதிய தடுப்பணைகளை கட்ட உத்தேசித்திருப்பதாக 5.2.2019 அன்று செய்தி வந்ததையடுத்து, இத்தடுப்பணைகள் கட்டுவதற்கான அனுமதியை வழங்கக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் தடுப்பணைகள் கட்டப்படக்கூடாது எனவும் அவ்வரசின் நீர்வள ஆதாரத் துறைக்கு அறிவுரை வழங்குமாறு 6.2.2019 அன்று ஆந்திர அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பாலாறு நதிநீர் பிரச்சனையில் கவனத்துடனும் சட்டரீதியாகவும் தமிழக அரசை தொடர்ந்து அணுகி வருகிறது. தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதற்கு அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close