[X] Close

ஐஜிக்கு எதிரான பாலியல் புகார்: உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்படி பெண் எஸ்பி சிபிசிஐடியில் ஆஜர்: சாட்சியத்தை பதிவு செய்தார்


  • முத்தலீப்
  • Posted: 12 Feb, 2019 18:15 pm
  • அ+ அ-

லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜியாக பணியாற்றிய முருகன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவருக்கு கீழ் பணியாற்றும் பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த விவகாரம் வெளியானதை அடுத்து இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார்.

புகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. இதை எதிர்த்து ஐஜி முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது துறையிலே விசாகா கமிட்டி உள்ளதாகவும் சிபிசிஐடி விசாரணைக்கு தடைவிதிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

இதேபோல், முருகனை பணிமாற்றம் செய்ய கோரி புகார் அளித்த பெண் எஸ்பியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை நேற்று விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்,   புகார் அளித்து ஆறுமாதங்களாகியும் பாலியல் வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது  வேதனைக்குரியது, என வேதனை தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் குடும்பம், சமூகப்பிரச்சினைகளை தாண்டி புகார் அளிக்க வருவதே அறிது, அதில் இப்படி தாமதமானால் எப்படி,  மேலும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சம்பந்தப்பட்ட காவல் துறையை அணுக தடுப்பது எது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி சிபிசிஐடி போலீஸில் சென்று உங்கள் சாட்சியத்தை பதிவு செய்யுங்கள் என பெண் எஸ்பிக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து புகார் அளித்த பெண் எஸ்பி இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சாட்சியத்தை பதிவு செய்தார். இதையடுத்து நாளை விசாரணைக்கு வரும் வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியாகும் என தெரிகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close