வங்கக் கடலில் நிலநடுக்கம்; சென்னையில் பாதிப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் இன்று காலை 7.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னைக்கு வடகிழக்கே 600 கி.மீ. தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இது ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. சில வினாடிகள் நில அதிர்வு இருந்ததாக, பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் இல்லை, சுனாமி ஆபத்தும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ''இன்று காலை 7.02 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு வடகிழக்கே சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் கடல் மட்டத்திற்கு கீழ் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆகப் பதிவு செய்யப்பட்டது. இதன் அதிர்வுகள் வடக்கு அந்தமான், சென்னை மற்றும் போர்ட் பிளேயரில் அமைக்கப்பட்டுள்ள நிலநடுக்கப் பதிவுக் கருவிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை'' என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.
நில அதிர்வு சென்னையில் இல்லை என கூறப்பட்டாலும் பலரும் தாங்கள் அதை உணர்ந்ததாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். நிலநடுக்கம் காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கடலிலும் எவ்வித மாற்றமும் இல்லை.. நில நடுக்கம் டைடல் பார்க் பகுதியில் நன்கு உணரப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் வானிலை ஆய்வு மையம் மறுத்துள்ளது.