[X] Close

சோதனை மேல் சோதனை... ஈரோடு பழங்குடியின மாணவி சிவரஞ்சனியின் தம்பி மரணம்: சோகத்தில் ஆழ்ந்தது காளிதிம்பம் கிராமம்


erode-tribal-student-sivaranjani-s-brother-dies

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 12:38 pm
  • அ+ அ-

பெற்றோரை இழந்த நிலையில் தம்பிக்காக தனது கல்வியை தியாகம் செய்த ஈரோடு பழங்குடியின மாணவி சிவரஞ்சனிக்கு, தமிழக முதல்வரின் உதவி கிடைத்தது. ஆனால், மூளைக்காய்ச்சலுக்கு அதே தம்பியை பறிகொடுத்த நிலையில், தற்போது தனிமரமாய் நிற்கும் மாணவியைக் கண்டு கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில், காளிதிம்பம் வனக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சாமிநாதன் - மாரம்மாள் தம்பதிக்கு சிவரஞ்சனி (18) என்ற மகளும், ஹரிபிரசாந்த் (14) என்ற மகனும் உள்ளனர்.

மாரம்மாள் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டதால், சாமிநாதன் தனது மகள் சிவரஞ்சனி, ஹரிபிரசாந்த் இருவரையும் கூலி வேலை செய்து படிக்க வைத்தார். சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த சிவரஞ்சனி, பிளஸ் 2 முடித்துவிட்டு பட்டயக் கணக்காளர் ஆக வேண்டுமென்ற கனவில் இருந்தார். இதற்கென கோவை அரசு கலைக்கல்லூரியில் மேற்படிப்பு படிப்பதற்காக, இடம் கிடைத்ததால் அங்கு படிப்பதற்காகச் சேர்ந்தார். அவரது தம்பி ஹரிபிரசாந்த், தலமலை அரசு உண்டு உறைவிட பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சாமிநாதனுக்கு கடந்த ஆண்டு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிவரஞ்சனி படிப்பை விட்டுவிட்டு, தனது தந்தையை கவனிப்பதற்காக வந்துவிட்டார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த சாமிநாதன் இறந்துவிட்டதால், சிவரஞ்சனியும், ஹரிபிரசாந்த் தும் தனித்து விடப்பட்டனர்.

தந்தை நோய் வாய்ப்பட்டதால், தனது கல்வியைத் துறந்த சிவரஞ்சனி, தனது தம்பியின் கல்விக்கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன், 100 நாள் வேலைத்திட்டத்தில் சேர்ந்து வேலைக்குச் சென்று தனது தம்பியை படிக்க வைத்தார். இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலையில் இருந்த சிவரஞ்சனி மற்றும் ஹரி பிரசாந்த் ஆகியோரது கல்விச்செலவை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். வரும் கல்வியாண்டு முதல் சிவரஞ்சனி ஏற்கெனவே படித்து வந்த கோவை அரசு கலைக்கல்லூரியில் கல்வியைத் தொடர பழங்குடியினர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் தலமலை உண்டு உறைவிட பள்ளியில் படித்து வந்த ஹரிபிரசாந்துக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் மூளைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஹரிபிரசாந்த்தின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று ஹரிபிரசாந்த் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் காளிதிம்பம் மலைகிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

தாய், தந்தையை இழந்த நிலையிலும், தன் தம்பியின் கல்விக்காக வேலைக்கு சென்ற சிவரஞ்சனி, தற்போது சகோதரனையும் இழந்து தனிமரமாக மாறியுள்ளது காளித்திம்பம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close