[X] Close

கால விரயம், அலைக்கழிப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மீனாட்சி கோயில் சித்திரை திருவிழாவுக்கு ஜிபிஎஸ் செயலி செயல்படுத்தப்படுமா?- பக்தர்கள் எதிர்பார்ப்பு


ips-app

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 12:12 pm
  • அ+ அ-

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின்போது அம்மன், சுவாமி வீதி உலாவின் இருப்பிடத்தை அறியும் வகையில் ஜிபிஎஸ் செயலியை செயல் படுத்த வேண்டும் என பக்தர்கள் `இந்து தமிழ்' உங்கள் குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, `இந்து தமிழ்' உங்கள் குரல் சேவையில் தொடர்புகொண்ட அண்ணா நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி கூறியது: சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 8-ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் தினமும் அம்மன்-சுவாமி வீதி உலா, தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுகள் நடைபெறும்.

கடந்த ஆண்டு திருவிழாவில் அழகர் பவனியின்போது மாவட்ட காவல்துறை `மதுரை காவலன்' என்ற மொபைல் செயலியில் அழகரின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள வசதியாக ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்ப டுத்தியது. இதற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால், இச்செயலியை ஏராளமான பக்தர்கள் தங்கள் செல்போன்களில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தினர். இதன் மூலம் பக்தர்கள் அழகரின் தரிசனத்துக்காக அலைக் கழிப்பது, காத்திருப்பது தவிர்க்கப்பட்டது.

அழகரின் இருப்பிடத்தையும் எளிதாக அறிந்துகொள்ள முடிந்தது. தவிர வாகன ஓட்டிகளும் இதனைப் பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மாற்று வழியைப் பயன்படுத்தவும் மிகவும் உதவியாக இருந்தது. மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின்போது நாள்தோறும் அம்மன்-சுவாமி ஆகியோர் பல்வேறு வாகனங்களில் மாசி, ஆவணி, சித்திரை வீதிகளையும், வில்லாபுரம் பாகற்காய் மண்டபம் உள்ளிட்ட இடங்களுக்கும் வீதி உலாச் செல்வது வழக்கம். அம்மன் உலாச் சென்று திரும்ப சுமார் நான்கு மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. தவிர ஒவ்வொரு நாள் விழா நிகழ்வுகளைப் பொருத்து சுவாமி புறப்படும் நேரமும், உலா நேரமும் மாறுபடும். இதனால் பக்தர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர். எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு அம்மன் உலாவுக்காக ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் நகரின் முக்கிய வீதிகளில் பக்தர்கள் மணிக் கணக்கில் காத்திருப்பதைக் குறைக்கலாம்.

மேலும் புறநகர் பகுதிகளிலிருந்து வீதி உலாவைக் காண வருபவர்கள் ஊர்வலத்தின் தற்போதைய இருப்பிடத்தைத் துல்லியமாக தெரிந்துகொண்டு தங்களுக்கு வசதியான இடத்தில் சுவாமியை தரிசனம் செய்ய முடியும். மேலும் தாமதமாக வந்து தரிசனம் செய்ய முடியாமல் திரும்பும் நிலையையும் தவிர்க்கலாம். இது தவிர தேரோட்டத்தின் போதும் ஜிபிஎஸ் செயலியை பயன் படுத்தி இதே பலன்களைப் பெறலாம். காவல்துறையும், கோயில் நிர்வாகமும் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்த இப்போதிருந்தே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் கேட்டபோது “இக்கோரிக்கை குறித்து பரிசீலித்து செயல்படுத்துவற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close