[X] Close

நாடாளுமன்ற தேர்தலோடு காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல்: எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்


parliamentary-election

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 10:30 am
  • அ+ அ-

காலியாக உள்ள 21 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலோடு தேர்தல் நடத்தவேண்டும் என்று எதிர் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக, எதிர்கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி: அரசமைப்பு சட்டப்படி, ஜனநாயக முறைப்படி21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து, தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும். அதிமுக தலைமையின் வற்புறுத்தலின் காரணமாக மத்திய அரசின் நிர்பந்தத்துக்கு தேர்தல்ஆணையம் பணிந்து போகுமேயானால் அதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் அணி திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ஆளும்கட்சிகளது விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு சட்டம் வகுத்து தந்துள்ள விதிப்படி தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். அரசியல் காரணங்களுக்காக இதை நிறைவேற்றத் தவறுவது இந்திய ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதாக அமைந்துவிடும். அரசியல் கூட்டணி லாபத்துக்காக இடைத்தேர்தல்கள் தள்ளி வைக்க முயலப்பட்டால் ஜனநாயக விரோதநடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்க தமிழக மக்களும், ஜனநாயக சக்திகளும், அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: நாடாளுமன்றத் தேர்தலோடு 21 சட்டப் பேரவைத்தொகுதிகளுக்கான தேர்தலையும் இணைந்து நடத்துவதுதான் சரியான, நியாயமான, நேர்மையான,நடுநிலை தவறாத அணுகுமுறையாகும். தேர்தல் ஆணையம்நடுநிலையோடு செயல்படும்போதுதான் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படும். ஜனநாயகம் பாதுகாக்கப்படும். மத்திய அரசின்அழுத்தத்துக்கு உடன்பட்டு தேர்தல் ஆணையம் களங்கத்துக்கு ஆளாக வேண்டாம் என்று வலியுறுத்துகிறேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்: தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள தொகுதிகளில் சுமார் 10 சதவீதம் தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதல்முறை. அந்தத் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே,காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்துவதுதான் முறையானதாக இருக்கும். இதன் மூலம், பொருட்செலவும், கால விரயமும் தடுக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டபேரவை இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.

திக தலைவர் கி.வீரமணி: பாஜக, அதிமுகவைத் தவிர சட்டமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும், 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலோடு தேர்தலை நடத்த ஒன்றுபட்டுகுரல் கொடுக்க வேண்டும். இதில், நீதிமன்றத்துக்குச் சென்று தீர வேண்டும் என்ற நிலை தேவைப்பட்டால், அதையும் நடத்த வேண்டும். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் காப்பாற்றப்படாவிட்டால் மக்களுக்கு ஜன நாயகத்தின் மீதுள்ள நம்பிக்கை போய்விடும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close