[X] Close

பட்டாசு ஆலைகளை திறக்கக் கோரி சிவகாசியில் தொடர் காத்திருப்புப் போராட்டம்


crackers-factory

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 10:26 am
  • அ+ அ-

பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்கக் கோரியும், பட்டாசுத் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கக் கோரியும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்கள், ஆலை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,007 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இத் தொழிலில் நேரடியாக 3 லட்சம் பேரும், உப தொழில்கள் சார்ந்து 5 லட்சம் பேரும் வேலை செய்கின்றனர். நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கக்கோரி கடந்த 2015-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இடைக்காலத் தீர்ப்பு கடந்த ஆண்டுஅக்.22 மற்றும் 31-ம் தேதிகளில் வழங் கப்பட்டது.

அதில், பட்டாசு தயாரிப்பதற்கு முக்கிய வேதிப்பொருளான பேரியத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதோடு, சரவெடிகள் தயாரிக்க தடை விதித்த உச்ச நீதிமன்றம் இனிமேல் பசுமை பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்று உத்தர விட்டது.

பசுமைப் பட்டாசு என்றால் என்ன என்றே தெரியாத நிலையில், கால அவகாசமும் கொடுக்கப்படாததால் பட்டாசுத் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டனர். இதை யடுத்து கடந்த ஆண்டு நவ.12-ம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால், சிவகாசியில் உள்ள சுமார் 8 லட்சம் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். பட்டாசு ஆலைகளைத் திறக்கக் கோரி தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், ‘‘பட்டாசு தயாரிப்புக்கு பயன்படும் முக்கிய வேதிப் பொருளான பேரியத்துக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கவேண்டும், சரவெடிகள் தயாரிக்க அனுமதிக்க வேண்டும், சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும், இதற்காக தமிழக அரசு சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், வேலையில்லாமல் தவிக்கும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு இடைக்கால நிவாரண உதவி வழங்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகாசியில் அனைத்து பட்டாசுத் தொழிலாளர்கள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பில் திருத்தங்கல் சாலையில் உள்ள தனியார் திடலில் நேற்று தொடர் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது.

1,800 பேர் பங்கேற்புதமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தலைவர் ஆசைத்தம்பி, பொதுச் செயலர் மாரியப்பன், தமிழ்நாடு பட்டாசு விற்பனையாளர் கூட்டமைப்பின் தலைவர் ராஜா சந்திரசேகரன், செயலர் இளங்கோவன், சிஐடியு மாவட்டச் செயலர் தேவா மற்றும் பட்டாசுத் தொழிலாளர்கள் 1,800 பேர் கலந்துகொண்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close