[X] Close

மாற்றுப் பொருள் கிடைத்தால் பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுக்கும் தடை: அமைச்சர் கே.சி.கருப்பணன் திட்டவட்டம்


plastic-milk

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 09:46 am
  • அ+ அ-

பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுக்கு மாற்றுப் பொருள் கிடைத்தால் பால் பாக்கெட்டுக்கும் தடை விதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு துறை மற்றும் லயோலா கல்லூரி சார்பில் பல்லுயிர் பரவல் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் இரு நாட்கள் நடைபெறும் தேசிய கருத்தரங்கம் தொடக்க விழா லயோலா கல்லூரியில் நேற்று நடைபெற்றது. அதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்று, பல்லுயிர் பரவல் தொடர்பான அறிவியல் கண்காட்சியை தொடங்கிவைத்து, பல்லுயிர் பரவல் தொடர்பான நூலை வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு பொதுமக்கள் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். பொதுவாக பிளாஸ்டிக் பைகளில் சூடான பொருட்களை அடைப்பதால் தான் புற்றுநோய் போன்ற நோய்கள் வருகின்றன. குளிர்ச்சியான பால் தான் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக் அத்தியாவசிய பொருள் என்பதாலும், அதற்கு மாற்று கிடைக்காததாலும், பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுக்கு தடை விதிக்கப்படவில்லை. மாற்றுப் பொருள் கிடைத்தால், பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுக்கும் தடை விதிக்கப்படும். பிளாஸ்டிக் தடையால் 80 சதவீதபிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகள் இணைந்து 100 சதவீதம் பிளாஸ்டிக் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் இந்திய விலங்கியல் கணக்கீட்டு துறை இயக்குநர் கைலாஷ் சந்துரு, கல்லூரியின் அதிபர் ஜெயபதி, செயலர் செல்வநாயகம், முதல்வர் ஆண்ட்ரூ பிரான்சிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close