[X] Close

ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் தவிப்பு, அதிருப்தி கோளாறு ஏற்படாமல் சீராக இயங்குமா மெட்ரோ ரயில்?- தீவிரமாக கவனித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி


chennai-metro-rail

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 09:44 am
  • அ+ அ-

சென்னை மெட்ரோ ரயில்களில் மக்கள்ஆர்வத்தோடு பயணம் செய்துவரும் நிலையில், தொழில்நுட்பக் கோளாறுகாரணமாக ரயில் சேவை அவ்வப்போது பாதிக்கப்படுவது அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது. எங்கு கோளாறுஏற்படுகிறது என்பது கண்காணிக்கப்பட்டு, சரிசெய்யப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மக்கள்தொகை, வாகனப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட போக்குவரத்து வசதியாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்ட பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கான முழுமையான சேவை 10-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர், லிஃப்ட், மெட்ரோ ரயிலில் வசதியான இருக்கை, ஏசி என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, வைஃபை, ரயில் நிலையங்களின் கூரைகளில் சோலார் தகடு அமைத்து மின்உற்பத்தி செய்வது உள்ளிட்ட புதிய திட்டங்களையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் படிப்படியாக செயல்படுத்தி வருகிறது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், விமான நிலையம் ஆகியவை மெட்ரோ ரயில் சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதேநேரம், மெட்ரோ ரயில் சேவையில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவது, பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை புதிதாக தொடங்கியுள்ள நிலையில், மக்களிடம் மெட்ரோ ரயில்பயணத்தை ஊக்குவிக்கும் விதமாகஇலவச பயணத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், சைதாப்பேட்டையில் நேற்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், புதிதாக சேவை தொடங்கப்பட்ட டிஎம்எஸ் - சென்ட்ரல் வழித்தடத்தில் சேவை பாதிக்கப்பட்டது. விமானநிலையம் - சின்னமலை - டிஎம்எஸ் தடத்தில் காலை 8 மணி முதல் 10 மணிவரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

அண்ணா சாலை வழியாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய கிண்டி, சின்னமலை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஆர்வமாக வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். சிலர் ரயில் நிலையங்களிலேயே காத்திருந்தனர். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு, மதியம் 1 மணி வரை அரை மணி நேரத்துக்கு ஒரு சேவை இயக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு பிறகு, 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது.

இதுகுறித்து கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் சிலர் கூறியதாவது:மெட்ரோ ரயிலில் போகலாம் என ஆர்வத்தோடு வந்தோம். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், 2 மணி நேரத்துக்கு அண்ணா சாலை மார்க்கத்தில் நேரடி சேவை கிடையாது என்கின்றனர். நாங்கள் ஏற்கெனவே மெட்ரோ ரயிலில் சென்றபோது, நேரு பூங்கா அருகே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு 20 நிமிடங்களுக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

மக்கள் விரைவாக, சொகுசாக செல்ல மெட்ரோ ரயில் சேவை உதவுகிறது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை அடிக்கடி தடைபடுவது ஏமாற்றம், அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இதே நிலை தொடர்ந்தால், மெட்ரோ ரயிலில் ஏறவே மக்கள் தயங்குவார்கள். எனவே, தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்து, ரயில் சேவை தடையின்றி இருக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபற்றி மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘உலக அளவில் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகளுக்கு எந்த பாதுகாப்பு குறைபாடும் ஏற்படாது. மெட்ரோ ரயில் இயக்கத்தின்போது, சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதை முற்றிலும் தடுப்பதற்கு, தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். எங்கு கோளாறு ஏற்படுகிறது என்று உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, சரிசெய்யப்படும்’’ என்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close