[X] Close

திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலையைக் கண்டித்து கும்பகோணத்தில் பிப்.22-ல் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு: தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று கடையடைப்பு


ramalingam-murder-case

ராமலிங்கம் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காரின் உரிமையாளர் முகம்மது இப்ராஹீமை நேற்று கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த போலீஸார்.

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 09:24 am
  • அ+ அ-

திருபுவனம் பாமக பிரமுகர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற உள்ளது என்று பாஜக மாவட்டத் தலைவர் ராஜா தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம்(45), கடந்த 5-ம் தேதி இரவு மர்ம நபர்கள் சிலரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று சமரச கூட்டம் நடைபெற்றது.

ஆர்டிஓ வீராசாமி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏஎஸ்பி பாலச்சந்திரன், கும்பகோணம், திருவிடைமருதூர் தாசில்தார்கள் மற்றும் பாஜ மாவட்டத் தலைவர் ராஜா, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் மற்றும் அனைத்து இந்து அமைப்பின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கத் தலைவர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஏஎஸ்பி பாலச்சந்திரன், விசாரணை சரியான முறையில் நடந்து கொண்டிருப்பதால் கடையடைப்பு போராட்டம் இப்போது தேவையில்லை என்றார். அவரது கருத்தை இந்து அமைப்பினர் ஏற்றுக்கொள்ளாமல் விவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் ராஜா கூறியபோது, "ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 12-ம் தேதி (இன்று) கடையடைப்பு நடத்த உள்ளோம். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் மவுன அஞ்சலி ஊர்வலமும் நடைபெற உள்ளது. மேலும் வரும் 22-ம் தேதி ராமலிங்கம் கொலைக்கு கண்டனம் தெரிவித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற உள்ளது" என்றார்.

கார் உரிமையாளர் கைது

இந்நிலையில் ராமலிங்கத்தை கொலை செய்தவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கார் நேற்று முன்தினம் திருச்சி பாலக்கரையில் கைப்பற்றப்பட்ட நிலையில், அந்தக் காரின் உரிமையாளர் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த முகம்மது இப்ராஹீம்(47) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர், முகம்மது இப்ராஹீமை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close