அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறுவது குறித்து அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்: பேரவையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து அரசு பரிசீலித்து முடிவெடுக்கும் என பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய தங்கம் தென்னரசு (திமுக), ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்) ஆகியோர், ‘‘பழைய ஒய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது துறைரீதியாகவும் காவல்துறை மூலம்வழக்குகள், கைது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அரசு திரும்பப்பெற வேண்டும்'' என வலியுறுத்தினர்.
அவர்களுக்கு பதிலளித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி 1-10-2017 முதல் ஊதிய உயர்வு அமல்படுத் தப்பட்டது. புதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-1-2019 முதல் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2003 முதல் மேற்கு வங்கம் தவிர மற்ற அனைத்து மாநிலங் களிலும் புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. 2003-க்குப் பிறகு பழைய ஓய்வூதியத் திட்டம் இல்லை என்பது தெரிந்துதான் அரசுப் பணியில் சேர்ந்தனர். ஆனாலும் அவர்கள் அனைவரும் ஜாக்டோ-ஜியோ மூலம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத்தேர்வுகள் நெருங்கு வதால் மாணவர்கள் நலன் கருதியும், அரசுப் பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் அரசு பலமுறை பேச்சு நடத்தியது. அரசின் நிதி நிலையை எடுத்துக் கூறினோம். ஆனாலும், அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பு மாறு அரசு ஊழியர்கள், ஆசிரி யர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனாலும், போராட்டத் தைத் தொடர்ந்தனர்.
பல இடங்களில் பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லு மாறு காவல்துறையினர் வேண்டு கோள் விடுத்தும் மறியலில் ஈடுபட்டனர். அப்படி மறியலில் ஈடுபட்டவர்களைத்தான் காவல் துறையினர் கைது செய்தனர்.
பொதுவாக சாலை மறியலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை காவல் துறையினர் கைது செய்வார்கள். அப்படிதான் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டனர். அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து அரசு பரிசீலித்து முடிவு செய்யும்.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- தொடர் லஞ்சப்புகார்; டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை: ரூ.2.40 லட்சம் பணம் பறிமுதல்
- திரையரங்குகளில் வெளியிலிருந்து உணவு குடிநீர் கொண்டுச்செல்ல அனுமதி கேட்டு மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
- லஞ்ச ஒழிப்பு ஐஜி மீதான பாலியல் புகார்; சிபிசிஐடியில் சாட்சியத்தை பதிவு செய்யுங்கள்: பெண் எஸ்பிக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
- சாதுவாக மாறிவிட்டான் சின்னதம்பி: காட்டுக்குள் அனுப்பும் முடிவு இல்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்