[X] Close

லஞ்ச ஒழிப்பு ஐஜி மீதான பாலியல் புகார்; சிபிசிஐடியில் சாட்சியத்தை பதிவு செய்யுங்கள்: பெண் எஸ்பிக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை


  • முத்தலீப்
  • Posted: 11 Feb, 2019 19:29 pm
  • அ+ அ-

 லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜியாக பணியாற்றிய முருகன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவருக்கு கீழ் பணியாற்றும் பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த விவகாரம் வெளியானதை அடுத்து இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார்.

புகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. இதை எதிர்த்து ஐஜி முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது துறையிலே விசாகா கமிட்டி உள்ளதாகவும் சிபிசிஐடி விசாரணைக்கு தடைவிதிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

இதேபோல், முருகனை பணிமாற்றம் செய்ய கோரி புகார் அளித்த பெண் எஸ்பியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், புகார் அளித்து ஆறுமாதங்களாகியும் பாலியல் வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டவசமானது என அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுக தடுப்பது எது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, சிபிசிஐடி போலீஸில் மீண்டும் புகார் அளிக்க பெண் எஸ்பிக்கு அறிவுறுத்தினார்.

குரூப் 1 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற வழக்குகளை கையாள தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் போன்ற மூத்த ஐஏஎஸ் அல்லது ஐ பி எஸ் அதிகாரிகள் தலைமையில் உயர் மட்டக் குழுவை ஏன் அமைக்க கூடாது? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கின் தீர்ப்பை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close