[X] Close

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் இயந்திரம் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு: சைகை மொழியிலும் விளக்கம் அளித்த மாநகராட்சி


physically-challenged

  • kamadenu
  • Posted: 11 Feb, 2019 10:11 am
  • அ+ அ-

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபாட் இயந்திரம் குறித்து காது கேளாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னை மாநகராட்சி தேர்தல் துறை சார்பில் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது நம்பகத்தன்மை இல்லை என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தற்போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை சுமார் 7 விநாடிகள் வரை காட்டும் விவிபாட் இயந்திரம், சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கூட, யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிவிக்கும் இயந்திரத்தை பயன்படுத்த இருப்பதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த இயந்திரத்தின் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாநிலத் தேர்தல் அதிகாரி அலுவலகம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி சார்பில், இந்திய காது கேளாதோர் வங்கி ஊழியர் சம்மேளனத்துடன் இணைந்து, யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து காது கேளாதோர், வாய்பேச முடியாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு விளக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர் ஆர்.லலிதா பங்கேற்று, இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக சைகை மொழியிலும் நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது. இந்திய காது கேளாதோர் வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலர் டி.ராகவா, மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) எ.பெருமாள் ஆகியோர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close