[X] Close

நாட்டின் பாதுகாப்பை புறந்தள்ளிவிட்டது காங்கிரஸ்: திருப்பூர் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கு


for-congress-defence-sector-is-only-about-brokering-deals-says-pm-modi

  • போத்திராஜ்
  • Posted: 10 Feb, 2019 17:52 pm
  • அ+ அ-

 

திருப்பூர், பிடிஐ

நாட்டின் பாதுகாப்பை காங்கிரஸ் கட்சி புறந்தள்ளிவிட்டது. இடைத்தரகர்கள் மூலமாக பேரம்பேசுவதைத்தான் பாதுகாப்புத் துறை என நினைக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியைப் பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்.

ஆந்திர மாநிலத்தில் பல்வேறு திட்டங்களையும் தொடங்கிவைத்து, பாஜக கூட்டத்தில் பிரமதர் மோடி இன்று பேசினார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருப்பூரில் அருகே பெருமாநல்லூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்த விழாவில் சென்னையில் டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவையை திருப்பூரில் இருந்து காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

சென்னை சர்வதேச விமானநிலையத்தை நவீனப்படுத்தும் 2-ம் கட்டப் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், திருச்சி விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம், திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை ஆகியவற்றை மோடி காணொலி மூலம் திறந்துவைத்தார்.

மேலும், எண்ணூரில் உள்ள பிபிசிஎல் கச்சா எண்ணெய் பாதுகாப்பு மையம், பகிர்மானத்தளம், ரூ.393 கோடியில், சென்னை மணிலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து துறைமுகத்துக்கு குழாய் மூலம் கொண்டு திட்டத்தையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பேரவைத் தலைவர் பி.தனபால் மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

அதன்பின் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

வானில் இருந்து கடல் வரை காங்கிரஸ் கட்சி பல்வேறு ஊழலில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் பாதுகாப்புத் துறையில் பல்வேறு ஊழல்களில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டதால், பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்த அனுமதிக்கவில்லை. நாட்டின் பாதுகாப்பை காங்கிரஸ் கட்சி புறந்தள்ளிவிட்டது.

கடந்த கால அரசுகளைக் காட்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசின் செயல்பாடு வித்தியாசமானது. ஏராளமான ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தும் நாட்டின் பாதுகாப்பை பற்றி காங்கிரஸ் கவலைப்படவில்லை. அவர்களைப் பொருத்தவரை பாதுகாப்புத்துறை என்றாலே இடைத்தர்களிடம் பேரம்பேசுவதுதான். நண்பர்களுக்கு அதன் மூலம் உதவுவதுதான்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரச தேச பாதுகாப்பை அணுகும்முறை வித்தியாசமானது. பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தற்சார்பு அடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க அனைத்து வகையிலும் நாங்கள் உழைக்கிறோம்.

நாட்டில் இரு பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்தி மையங்கள் அமைக்க இருக்கிறோம். அதில் ஒன்று தமிழகத்தில் அமைய இருக்கிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

இன்று அரசியல் கலாச்சாரத்தில் மோடியைப் பற்றி அவதூறு பேச, பரப்பத் தொலைக்காட்சியில் வேண்டுமானால் இடம் கிடைக்கலாம், ஆனால் தேர்தலில் நாட்டின் நலனுக்காக மட்டுமே போரிடுவோம், யாரையும் அவதூறாகப் பேசமாட்டோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நல்ல திட்டங்கள், பணிகள் பலருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. அதனால் என்னைத் திட்டுகிறார்கள், வசைபாடுகிறார்கள்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கே. காமராசர் ஆட்சியில் இருந்தபோது, ஊழல் நடைபெறுவதை ஒருபோதும் பொறுத்துக் கொண்டதில்லை.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய உயர் சாதி பிரிவினருக்கு 10சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினாலும், முந்தைய இடஒதுக்கீட்டை நாங்கள் குறைக்கவில்லை.

அமைப்பு சாரா தொழிலில் இருக்கும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் வரும் 15ம்தேதி தொடங்கப்படுகிறது. விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யும் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பதிலாக, அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அனைத்து இந்தியர்களும் எளிதாக வாழ வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close