[X] Close

மதுக்கடைகளை மூட வேண்டும்: மதுரை சின்னப்பிள்ளை வலியுறுத்தல்


madurai-chinnapillai

  • kamadenu
  • Posted: 10 Feb, 2019 10:10 am
  • அ+ அ-

மதுவினால் குடும்பங்கள் சீரழிந்து வருவதால், மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை சின்னப்பிள்ளை வலியுறுத்தி உள்ளார்.

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள களஞ்சியம் மகளிர் சுயஉதவிக் குழு அமைப்பின் தலைவர் மதுரை சின்னப்பிள்ளைக்கு சேலம் மாவட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சார்பில், சேலத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது.

இதில், பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:1995-ல் களஞ்சியம் மகளிர் சுயஉதவிக் குழுவை தொடங்கியபோது, நான் உள்ளிட்ட பெண்கள் பலரும் வங்கி, ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட எந்த அலுவலகங்களுக்கும் செல்லத் தெரியாமல் அறியாமையில் இருந்தோம். பலரும் குடும்பத்தை நடத்த முடியாமல் வறுமையின் பிடியிலும் இருந்தோம்.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்ட பின்னர், அறியாமை நீங்கியுள்ளது. வங்கிகள், ஆட்சியர் அலுவலகம் என அனைத்து அலுவலகங்களுக்கும் தனியாக சென்று வரும் துணிச்சல் பெற்றுள்ளோம். பலரின் வாழ்க்கையில் வறுமை நீங்கியுள்ளது.

பெண்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்து, பட்டதாரிகளாக்கியுள்ளனர். மகளிர் குழுவினருக்கு வழங்கப்பட்டு வந்த விபத்து காப்பீடு, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை ஆகியவை அரசால் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் வழங்க வேண்டும்.

களஞ்சியம் சார்பில் இந்திய முழுவதும் உள்ள சுயஉதவிக் குழுக்களில் 8 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இதில், 2 லட்சம் குடும்பங்கள் மதுவால் பாதிக்கப்பட்டுள்ளன. மதுப்பழக்கத்தால் ஏராளமான குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. கந்துவட்டி கொடுமையாலும் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. எனவே, மதுக்கடைகளை மூடவும், கந்து வட்டியை ஒழிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close