[X] Close

சட்டவிரோத மது விற்பனை; களத்தில் குதித்த சபாஷ் பெண்கள்: விற்பனை மையங்களை அடித்து உடைத்தனர்


  • முத்தலீப்
  • Posted: 09 Feb, 2019 14:46 pm
  • அ+ அ-

தமிழகம் முழுதும் மதுக்கடைகள் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மது விற்பனை நேரத்தை குறைக்க மதியம் 12 மணிக்கு மேல் விற்பனை என்கிற முறையை அரசு கொண்டுவந்தது. ஆனாலும் சட்டவிரோத மதுவிற்பனை நடந்துக்கொண்டுத்தான் இருக்கிறது.

சேலம் மாவட்டம் சூரமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதேபோன்று சமூக விரோதிகள் குடியிருப்புப் பகுதிகளில் ஆண்டுக்கணக்காக 24 மணி நேரமும் அமோகமாக மதுவிற்பனை செய்து வருவதை அப்பகுதி மக்கள் பல முறை எதிர்த்தும் விற்பனை செய்யும் நபர்கள் அவர்கள் செயலை நிறுத்தவில்லை.

இதனால் வெகுண்டெழுந்த சேலம், சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் மக்கள் சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஊடகங்கள் அங்கு திரண்டனர். போலீஸாரும் வந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். சட்டவிரோத மது விற்பனை செய்யும் நபர்களை பிடித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து மறியலை கைவிட கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அங்கு கூடியிருந்த பெண்கள் அதை ஏற்கவில்லை. ஆண்டுக்கணக்கில் எத்தனை முறை புகார் அளித்திருப்போம். ஒரு நடவடிக்கையாவது எடுத்தீர்களா என கேள்வி எழுப்பினர். பின்னர் ஊடகங்கள் முன்னிலையில் நாங்கள் எங்கெங்கு மதுபானம் விற்கப்படுகிறது என்று காட்டுகிறோம், விற்பனை செய்பவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம் என ஊடகங்கள் முன்னிலையில் தங்கள் பகுதிக்குள் நுழைந்தனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த போலீஸார் அவர்களுடன் சென்றனர். அப்போது பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு அப்பகுதியில் வீடுவீடாக சென்று சட்டவிரோத மதுபான விற்பனை செய்பவர்கள் வீடுகளை அடித்து உடைத்து மதுபானங்களை கைப்பற்றி வெளியே கொண்டுவந்து போட்டு உடைத்தனர்.

ஊடகங்கள் முன்னிலையில் வீடுவீடாக பெண்கள் புகுந்து சட்டவிரோத மதுபான விற்பவர்கள் வீடுகளுக்குள் புகுந்ததால் போலீஸார் செய்வதறியாது திகைத்து அவர்களுடன் சென்றனர். மதுபானங்களை கைப்பற்றி சாலையில் குவித்த பெண்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களை ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

அதிகாலை 4 மணிக்கு விற்பனை ஆரம்பமாகிறது, மது குடிக்க வருபவர்களால் அப்பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் நிம்மதியாக வெளியே செல்ல முடியவில்லை. நள்ளிரவு வரை குடித்துவிட்டு பெண்களை கேலி செய்வது, குழந்தைகளை தாக்குவது, தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வது வழியில் செல்பவர்களை வம்பிழுப்பது என சட்டம் ஒழுங்குக்கு பெரிய பிரச்சினையாக உள்ளதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல்துறையில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, இதுபோன்ற 24 மணிநேர மதுவிற்பனையால் ஆண்களும் எந்நேரமும் மதுபோதையில் உள்ளனர் என வேதனையுடன் தெரிவித்தனர். பெண்கள் திடீரென திரண்டு போர்க்கொடி தூக்கியதும் அது ஊடகங்களில் வெளியானதால் மது விற்பனை செய்யும் நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பெண்கள் திரண்டு போராட்டம் நடத்தினாலும் அப்பகுதியின் ஆண்கள் அவர்களுக்கு பக்கபலமாக நின்றதும் குறிப்பிடத்தக்கது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close