[X] Close

வன விலங்குக்கு தண்ணீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை உருவாக்கிய மாணவி: வெளிநாட்டு சுற்றுலா அழைத்துச் சென்று கவுரவிப்பு


student-created-an-automatic-machine-that-provides-water-for-the-wild-animal

  • kamadenu
  • Posted: 09 Feb, 2019 11:31 am
  • அ+ அ-

வன விலங்குகளுக்கு தண்ணீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை கண்டுபிடித்த பள்ளி மாணவியை வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று அரசு கவுரவப்படுத்தியது.

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவைச் சேர்ந்த அப்பக்கரை கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பத்தாம் வகுப்பு படித்த மாணவி காயத்ரி. இவரது தந்தை சுப்பிரமணியன், தாயார் லட்சுமி ஆகியோர் விவசாய கூலித் தொழிலாளர்கள்.

காயத்ரிக்கு சிறு வயது முதலே அறிவியல் மீது ஆர்வம் அதிகம். அறிவியல் ஆராய்ச்சியாளராக வேண்டும் என்பது இவரது லட்சியம். இதை அறிந்த அறிவியல் ஆசிரியர் தனலட்சுமி, காயத்ரியின் கனவை நனவாக்க பல்வேறு உதவிகளைச் செய்தார். `ஆற்றல் சேமிப்பும், வனவிலங்குப் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் திட்ட அறிக்கை தயாரித்தார்.

இதற்குச் செயல் வடிவம் கொடுத்து மதுரை மாவட்ட புத்தகக் காட்சியில் இடம்பெறச் செய்தார். இதில் இவருக்குப் பரிசு கிடைத்தது. பிறகு சென்னையில் நடந்த மாநில அளவிலான புத்தகக் காட்சியிலும் பரிசுக்குத் தேர்வானார்.

தானியங்கி சோலார் மோட்டார்

காயத்ரி உருவாக்கிய சோலார் மூலம் இயங்கும் மோட்டார், வனங்களில் வாழும் விலங்குகளின் தண்ணீர் தேவையைத் தீர்க்கப் பெரும் உதவியாக அமைந்தது. வன விலங்குகள் வாழும் பகுதியில் தண்ணீர் தொட்டியில் நிறுவ தானியங்கி சோலார் மோட்டாரை அமைத்தார். தொட்டியில் தண்ணீர் குறைந்ததும் தானாகவே மோட்டார் இயங்கி தண்ணீர் நிரப்பும். பின்னர் தண்ணீர் நிறைந்ததும் மோட்டார் தானாகவே இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும்.

தொட்டியில் எப்போதும் குறையாமல் தண்ணீர் இருந்து கொண்டேஇருக்கும். இதனால், வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதும் தடுக்கப்படும். மக்களும் அச்சமின்றி வாழலாம். இவர் உருவாக்கிய இயந்திரத்தை தமிழக அரசு அங்கீகரித்து, அவரை பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் சென்று கவுரவப்படுத்தியது.

மாநில விருதுக்கு தேர்வு

இது குறித்து அப்பக்கரை பள்ளித் தலைமை ஆசிரியை பழனியம்மாள் கூறுகையில், 7-ம் வகுப்பில் இருந்தே காயத்ரி அறிவியலில் ஆர்வம் காட்டினார். அவர் உருவாக்கிய இயந்திரம் மாவட்ட, மாநில விருதுக்கு தேர்வானது. சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொண்ட மாணவர்கள் 50 பேரை தமிழக அரசு ஸ்வீடன், பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்றது. இதில் காயத்ரியும் ஒருவர். ஏழ்மையால் செலவுக்குக்கூட பணமின்றி தவித்த அவருக்கு பள்ளி, கிராமத்தினர், மாவட்ட கல்வி அதிகாரிகள் என பலரும் உதவினர் என்றார்.

தற்போது திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ்1 படிக்கும் காயத்ரி கூறுகையில், அறிவியல் ஆர்வம் காரணமாக இந்த உபகரணத்தை உருவாக்கினேன். இதற்காக வெளிநாடு அழைத்துச் சென்றதன் மூலம் மேலும் ஊக்கமடைந்துள்ளேன். தொடர்ந்து இதுபோன்ற பல கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவேன், என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close