நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்: தலைமறைவான 250 பேரை கைது செய்ய தீவிரம்

சித்தரிப்புக்கான படம்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் மாநகர காவல் துறையினர் தலைமறைவான 250 பேரை கைது செய்யும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பிக்பாக்கெட், வழிப்பறி, நகை பறிப்பு, வாகனத் திருட்டு, பணம் கேட்டு மிரட்டல், திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் தொடர்பாக கோவை மாநகர காவல் நிலையங்களில், தினமும் 10 முதல் 20 வழக்குகள் பதிவாகின்றன. குற்றச் சம்பவங்கள் தொடர்பாக, மாநகர காவல்துறையில் கடந்த ஆண்டு 720 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதில் 513 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குற்ற வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்படும் நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வரும் இவர்கள், அதன் பின்னர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிடுகின்றனர். இதனால் வழக்கு விசாரணை பாதிக்கப்படுகிறது. தவிர, இவ்வாறு தலைமறைவாகும் பழைய குற்றவாளிகள் மீண்டும் வழிப்பறி, நகை பறிப்பு, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதால் போலீஸாருக்கும் தலைவலி ஏற்படுகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் மே மாதம் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளி வந்தால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிடும். எனவே, அதற்கு முன்னர் மாநகர காவல்துறை நிர்வாகத்தினர், நீதிமன்றத்தால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டவர்களை கண்டறிந்து கைது செய்யும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகர தேர்தல் பிரிவு காவல் ஆய்வாளர் பி.என்.ராஜன் கூறும் போது, ‘‘தேர்தல் நெருங்குவதால் மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட குற்ற வழக்குகளில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 250 பேரை கண்டறிந்து கைது செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் சராசரியாக 16 பிடிவாரன்ட் குற்றவாளிகள் உள்ளனர். இவர்களை கண்டறிந்து கைது செய்யும் பணி அந்தந்த பகுதி காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’’ என்றார்.