[X] Close

மக்களின் நலனுக்கோ வளர்ச்சிக்கோ உதவாத பட்ஜெட்: பல்வேறு தலைவர்கள் குற்றச்சாட்டு


budget-worthless-for-the-benefit-or-growth-of-the-people

சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் துணை முதல்வர் ஓபிஎஸ். - படம்: எல்.சீனிவாசன்

  • kamadenu
  • Posted: 09 Feb, 2019 10:43 am
  • அ+ அ-

மக்களின் நலனுக்கோ தமிழகத்தின் வளர்ச்சிக்கோ உதவாத பட்ஜெட் என அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பற்றாக்குறையும், கடன்களும் நிரம்பி வழியும் 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, மத்திய அரசு எப்படியெல்லாம் தமிழகத்தை ஓரவஞ்சனை செய்து வருகிறது என்று நிதி அமைச்சர் சொல்லியிருக்கிறார். கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தில் இருந்து மீள்வதற்கு ரூ.15,000 கோடி அளவுக்கு நிவாரணம் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதில் 10-ல் ஒரு பகுதிகூட மத்திய அரசிடமிருந்து பெற முடியாத அவல நிலையில்தான் தமிழக அரசு உள்ளது. ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: திவாலான கம்பெனியின் வரவு-செலவு அறிக்கைபோல் உள்ளது. 4 லட்சம் கோடி ரூபாய் கடன் குவிந்து கிடக்கிறது. ஆண்டுக்கு 33 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டி உள்ளது. இந்த ஆண்டுக்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. வருவாயைப் பெருக்குவதற்கு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை. வருவாயைப் பெருக்காத காரணங்களால் வளர்ச்சித் திட்டங்கள் ஏதும் இல்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் சுய உதவிக் குழுவில் வாங்கியிருந்த கடனை தள்ளுபடி செய்யக் கேட்டிருந்தனர். அது குறித்த அறிவிப்பு இல்லை. இதற்கெல்லாம் காரணம் மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறைதான். இந்த நிதிநிலை அறிக்கை ஒரு ஏமாற்று அறிக்கை என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன்: மாநில அரசின் கடன் சுமை ரூ.4 லட்சம் கோடியை எட்டியிருக்கும் நிலையில் மேலும், ரூ.43 ஆயிரம் கோடி கடன் வாங்குவோம் என தெரிவித்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பறிபோயுள்ள நிலையில் அவர்களுக்கான நிவாரணம் வழங்குவது, மறுவாழ்வை உறுதி செய்வது என்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை. விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் வழங்கப்படவில்லை. மொத்தத்தில் நிதிநிலை அறிக்கை மாநில மக்களின் நலனுக்கோ, வளர்ச்சிக்கோ உதவும் நோக்கம் எதுவும் இல்லாத வெற்றுக் காகிதத் தொகுப்பாக உள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு துணை போய்க்கொண்டு இருப்பதை மன்னிக்கவே முடியாது. வேலைவாய்ப்புக்கான புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும் சூழலில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு செயல் திட்டம் எதுவும் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை அறிவிப்பு வெளியிடாதது கண்டனத்துக்குரியது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: தமிழக அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு துரோகத்தையும், விளிம்பு நிலை மக்களுக்கு அநீதியையும் இழைத்துள்ளது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு எந்தத் திட்டமும் இல்லை. தமிழகத்தின் கடன் சுமார் நான்கு லட்சம் கோடியை நெருங்குவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. அவற்றை எப்படி அடைக்கப் போகிறார்கள் என்பதற்கு எந்தவொரு வழியும் இதில் கூறப்படவில்லை.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீடும் இந்த பட்ஜெட்டில் செய்யப்படவில்லை. மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவேண்டிய நிலைக்கே அவர்களைத் தமிழக அரசு தள்ளியிருக்கிறது. நாட்டை மீள முடியா கடனில் தள்ளியிருப்பதோடு புதிய திட்டங்கள் ஏதும் இல்லாத பட்ஜெட்டாக உள்ளது. பட்ஜெட் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு தனது பங்கைப் பெற உரிய அழுத்தம் கொடுக்காமல், அவர்களின் மக்கள் விரோத திட்டங்களுக்கு வாசலைத் திறந்திருப்பது வேதனைக்குரியது. விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கடன் வழங்க திட்டமிட்டிருக்கும் தமிழக அரசு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற நாசகரத் திட்டத்தைக் கைவிட மறுப்பது விவசாயிகளை ஏமாற்றும் வேலையாகும்.

இ.யூ.முஸ்லிம் லீக் எம்எல்ஏ கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்: நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலனுக்கான எந்த திட்டங்களும் இல்லை. மத்திய அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிதிநிலை அறிக்கையிலே கோடிட்டு காட்டுகிறார்களே தவிர எந்தப் பொதுவான திட்டங்களும் சொல்லப்படவில்லை.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலப் பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு: வணிகர் நலன்கள், உரிமைகள், வாழ்வாதார பாதிப்புகள், ஜி.எஸ்.டி வரிகுறைப்பு, உணவுப் பாதுகாப்புச் சட்டம், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இன்னமும் தீர்வு காணாமல் உள்ளது. இதற்கான முறையான அறிவிப்புகள் இன்னமும் வெளியிடப்படவில்லை. ஒட்டுமொத்தமாக இது வணிகர்களை புறக்கணிக்கும் பட்ஜெட் என்றே சொல்லலாம்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன்: நீர் ஆதாரம், விவசாயத்தை பாதுகாக்க அண்டை மாநிலங்களை போல் புதிய அணைக்கட்டுகளை கட்டி நீரை சேமிக்க எந்த திட்ட அறிவிப்பும் இல்லை. இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்காமல் இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்: வேளாண் இயந்திரங்கள் வாடகை மையத்தை கிராமங்களில் அமைப்பது, இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துவது, நீர்ப் பாசனத் திட்டங்கள் ஆகியன வரவேற்புக்குரியவை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கடன் தள்ளுபடியை மாநில அரசுகள்தான் மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில், அதுகுறித்து எதுவும் தெரிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close