[X] Close

கடன் அளவை கட்டுப்படுத்தி பற்றாக்குறையை குறைக்க பட்ஜெட்டில் முக்கியத்துவம்: தமிழக நிதித் துறை செயலர் கே.சண்முகம் விளக்கம்


budget

  • kamadenu
  • Posted: 09 Feb, 2019 09:55 am
  • அ+ அ-

கடன் அளவை கட்டுப்படுத்தி, வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறையை குறைக்க இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக நிதித் துறை செயலர் கே.சண்முகம் தெரிவித்தார்.

தமிழக அரசின் பட்ஜெட் நேற்று தாக்கல்செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை நிதித் துறை செயலர் கே.சண்முகம் சந்தித்தார். அவர் கூறியதாவது:

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.2 லட்சத்து 68 ஆயிரத்து 501 கோடி. வருவாய் வரவுகள் ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 721 கோடி. வருவாய் செலவுகள் ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்து 35 கோடி. வருவாய் பற்றாக்குறை ரூ.14 ஆயிரத்து 314 கோடி.

மூலதன செலவுகளுக்கான ஒதுக்கீடு ரூ.31 ஆயிரத்து 251 கோடி. நிதி பற்றாக்குறை ரூ.44 ஆயிரத்து 176 கோடி.

மூலதன செலவுக்கு 20% அதிக நிதிஇந்த வரவு செலவு திட்டத்தில் முக்கியமாக, 36 புதிய கட்டமைப்புகள் சம்பந்தப்பட்ட, மக்கள் நலம் தொடர்பான நீண்டகால அடிப்படையிலான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீர்ப்பாசனம், சென்னையில் பார்க்கிங் வசதிக்கு ரூ.2 ஆயிரம் கோடியில் என திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மூலதன செலவுகளுக்கு இந்த ஆண்டைவிட அடுத்த நிதியாண்டுக்கு 20 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடன் அளவை கட்டுப்படுத்தி, வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறையை குறைக்க முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

திருத்த மதிப்பீட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.19 ஆயிரத்து 319 கோடியாக உள்ளது. இது 2019-20ல் ரூ.14 ஆயிரத்து 314 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

நிதி பற்றாக்குறையை 2.85 சதவீதத்தில் இருந்து 2.56 சதவீதமாக குறைத்துள்ளோம். அடுத்த ஆண்டுக்கான கடன் அளவாக மத்திய அரசு ரூ.51 ஆயிரத்து 800 கோடி அனுமதித்துள்ளது. ஆனால், தற்போது கடனை ரூ.43 ஆயிரம் கோடி அளவுக்கு குறைத்துள்ளோம். இதன்மூலம், வட்டிச் செலவினங்கள் குறையும்.

வரி வருவாய் முன்னேற்றத்தில் உள்ளது. இது தொடர்ந்து இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். மாநில அரசின் கடன் அளவு ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வணிக வரி மற்றும் பெட்ரோல் பொருட்கள் மீதான வரி வருவாயை கருத்தில் கொண்டு வருவாயை கணக்கிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் குறைந்தது ஏன்?

கடந்த ஆண்டில் பெட்ரோல் வரி வருவாய் அதிக அளவில் இருந்தது. வரும் ஆண்டிலும் அந்த அளவுக்கு எதிர்பார்க்க முடியாது. அதேபோல, உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது விற்பனை 8 சதவீதம் மட்டுமே அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வருவாய் எந்த அளவில் உள்ளது?

ஜிஎஸ்டி மூலமாக இந்த நிதியாண்டில் கடந்த டிசம்பர் வரை ரூ.33 ஆயிரத்து 198 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.53 ஆயிரத்து 739 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

நேரடி மானிய திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது?

நேரடி மானிய திட்டங்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, உணவு மானியமாக ரூ.6 ஆயிரத்து 641 கோடி, எரிசக்தி துறைக்கு ரூ.10 ஆயிரத்து 442 கோடி, டீசல் மானியமாக ரூ.250 கோடி என ரூ.17 ஆயிரத்து 333 கோடி ஒதுக்கப்படுகிறது.

கடன் வாங்கி அதில் ஒரு தொகையை வட்டியாக செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

அரசுகள் கடன் வாங்கிதான் நிர்வாகம் செய்கின்றன. கடந்த 3 ஆண்டுகளாக வரி வருவாய் குறைந்திருந்தது. தொடர்ந்து வருவாய் பற்றாக்குறை குறையும்போது மூலதன செலவுகளுக்கு திருப்பிவிடப்படும். நிர்வாகத்தை நடத்தும்போது, பிரச்சினைகளை சமாளித்துக் கொண்டு செயல்படுவது அவசியம். அதற்கான முயற்சி இந்த நிதிநிலை அறிக்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close