[X] Close

தூய்மை இருந்தால் மட்டுமே அடிப்படை வசதிக்கு நிதி: ஆட்சியர் உத்தரவால் சீரடையும் படுகர் கிராமங்கள்


உதகை அருகே இடுஹட்டி கிராமத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள். |  படம்: ஆர்.டி.சிவசங்கர்

  • kamadenu
  • Posted: 09 Apr, 2018 12:25 pm
  • அ+ அ-

கிராமங்கள் தூய்மையாக இருந்தால் மட்டுமே அடிப்படை வசதிகளுக்கான நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால், நீலகிரி மாவட்ட படுகரின மக்கள் வசிக்கும் கிராமங்கள் தூய்மை பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. 

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது இடுஹட்டி கிராமம். எப்பநாடு ஊராட்சிக்கு உட்பட்ட இக்கிராமத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, கிராமம் முழுவதும் குப்பை சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஊர் மக்களை அழைத்த அவர், கிராமத்தை தூய்மையாக வைத்தால் மட்டுமே அடிப்படை வசதி உட்பட பிற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் எனக் கூறியுள்ளார். 

இதையடுத்து, கிராம தலைவர் தலைமையில், கிராமத்தை தூய்மையாக வைக்க மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, கிராமம் முழுவதும் தூய்மைப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கிராம ஊர் தலைவர் எம்.பெள்ளி கூறும்போது, ‘கிராமத்துக்கு தேவையான திட்டங்களுக்கு நிதி ஒதுக்க, கிராமத்தை தூய்மையாக வைக்க வேண்டுமென ஆட்சியர் வலியுறுத்தினார். அதன்பேரில், ஊரில் உள்ள 500 வீடுகளில், வீட்டுக்கு இருவர் என ஆயிரம் பேர், இடுஹட்டி கிராமத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டு வருகிறோம். குப்பையை முறையாக கையாண்டு, கிராமத்தை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுப்போம்’ என்றார். 

உதகை ஊராட்சி ஒன்றியக் குழு வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார் கூறும்போது, ‘உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு 13 ஊராட்சிகள் உள்ளன. அவற்றிலுள்ள 460 கிராமங்களில், தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இப்பணியில், ஊராட்சி செயலர்கள், சுயஉதவிக் குழுவினர், தூய்மை காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், குப்பையை தரம் பிரித்து முறையாக கையாளுதல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

தும்மனட்டி, கக்குச்சி, கூக்கல், தொட்டபெட்டா, கடநாடு ஆகிய 5 கிராமங்கள், முழுமையான தூய்மை கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இடுஹட்டி கிராமத்தில் குப்பையை பிரித்து, மக் கும் குப்பையை ஊரின் வெளிப்புறத்தில் குழியில் போட்டு, உரம் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து மக்காத குப்பை சேகரிக்கப்பட்டு, கடநாட் டில் உள்ள பிளாஸ்டிக் அரவை மையத்துக்கு கொண்டு செல்லப்படும். சாலைகள் அமைக்க பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்படும். குப்பை சேகரிக்க பணியாளர்கள் தேவை என மக்கள் வலியுறுத்தியதன் பேரில், ஊராட்சி மூலமாக இரு தூய்மை காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்’ என்றார். 

இடுஹட்டியை ஒட்டியுள்ள மொரக்குட்டி, பேரக்கல், முத்துசாமி நகர், காந்தி நகர், குரனூர், முரட்டல்லா, அகலார், ஐயர்பட்டி, ஜீவா நகர், எப்பநாடு ஆகிய கிராமங்களில், தூய்மைப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close