[X] Close

உயர் இரத்த அழுத்தம் இல்லா உலகம்


world-withour-high-pressure

டாக்டர்.ந.முருகேசன் தலைமை சிறுநீரக வல்லுனர் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை, புதுச்சேரி

  • kamadenu
  • Posted: 07 Apr, 2018 10:13 am
  • அ+ அ-

உலகின் மிகப்பெரிய நோய் உயர் இரத்த அழுத்தம். இதனால் உலகில் கிட்டத்தட்ட 240 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் தொடரும் இக்கொடிய நோயால் வருடத்திற்கு, உலகளவில் 76 லட்சம் (மொத்த இறப்பில் 15 சதவீதம்) பேர் இருக்கிறார்கள். உயர் இரத்த அழுத்தமே, மாரடைப்பு ஏற்படவும், இதயம் செயலிழந்து போவதற்கும், பக்கவாதம் ஏற்படவும், ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு புத்தி சுவாதீனம் குறைவதற்கும் மிக முக்கிய காரணமாக அமைகிறது. இதுவே சிறுநீரக கோளாறுக்கும், சிறுநீரக செயல் இழப்பிற்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது.

மேலும் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு கை, கால்களை இழக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. அதே போன்று, கண்ணின் விழித்திரை பாதிக்கப்பட்டு பார்வையை இழக்க வேண்டிய நிலையும் உள்ளது. இப்படி ஏற்படும் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் அவதியுறுகிறார்கள். அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இருந்தும் இல்லாதது போன்ற நிலை. வாழ்ந்தும் வாழாதது போன்ற எண்ணம். மொத்தத்தில் பிரயோஜனம் இல்லாத வாழ்வு. இப்படி பிரயோஜனமின்றி வீணாகும் காலம் வருடத்திற்கு 9.2 கோடி ஆண்டுகள் பலன்தரக்கூடிய ஆண்டுகள் பலனின்றி வீணாகின்றது.

இந்த நோயாள் பாதிக்கப்பட்ட மக்களில், எட்டில் (12.5%) ஒரு பகுதியினர் மட்டுமே தங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 30 சதவீதத்தினரிடமும், 18 வயதுக்குட்பட்டவர்களில் 3 சதவீதத்தினரிடமும் இந்த உயர் இரத்த அழுத்த நோய் காணப்படுகிறது. வயது அதிகம் ஆக ஆக, உயர் இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. இந்நோயால் 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவீதத்தினர், மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 80 சதவீதத்தினர் பாதிக்கப்டுகிறார்கள். 60 வயதில் இருக்கும் ஒருவருக்கு அவரின் இரத்த அழுத்தம் சாதாரண நல்ல நிலையில் இருந்தாலும் கூட அவருக்கு எஞ்சியுள்ள மீதி காலத்தில் உயர் இரத்த அழுத்தம் வர 90 சதவீதம் வாய்ப்புள்ளது. உயர் இரத்த அழுத்தம் இரண்டு விதங்களில் வருகின்றது.

முதல் விதம் (Primary Hypertension) இதன் ஆரம்பம் குழுந்தை (சிசு) பிறப்பதற்கு முன்பே நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்ப நிலை குழந்தை பிறப்பதற்கு முன்பே இருந்தாலும் கூட வாலிப பருவத்தில்தான் அது உயர் இரத்த அழுத்தமாக வெளிப்படுகின்றது. (Foetal programming of Adult Hypertension) மொத்தத்தில் இப்படிப்பட்ட இரத்த அழுத்தம், பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் வரை காணப்படுகிறது. மீதம் உள்ள 5 சதவீதத்தினர்க்கு 2வது விதமான Secondary Hypertension) உயர் இரத்த அழுத்தம் முழுக்க முழுக்க தெரிந்து கொள்ளப்படும் காரணங்களினாலே ஏற்படுகின்றது. முதல்வித உயர் இரத்த அழுத்தம் பரம்பரை பரம்பரையாக வரக்கூடியது.

இப்படி பரம்பரை பரம்பரையாக வருவதற்கு காரணமாக கருதப்படுவது பாதிக்கப்பட்ட மரபனுக்கள்தான் (Mutant Ganes) என்றாலும் இவைகளின் பங்கு 0.9 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 99 சதவீத மக்களுக்கு காரணமாக அமைவது அவர்கள் சிசுவாக (in utero) இருந்தபோது ஏற்பட்ட பாதிப்புதான் சிசுவின் பாதிப்பு அது பிறக்கும் போது குறைந்த எடை குழுந்தையாக வெளிப்படுகிறது. எடை குறைவாக பிறந்த பெண் குழுந்தை தனது பேறுகாலத்தில், குழந்தைகள் பெறுகின்றபோது அந்த குழுந்தைகளின் எடையும் குறைந்தே காணப்படுகின்றது. எனவே எடை குறைவோடு பிறக்கும் இந்த குழந்தைகளுக்கும் வாலிபப் பருவத்தில் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகின்றது. இப்படித்தான் உயர் இரத்த அழுத்தம் பரம்பரை பரம்பரையாக வருகின்றது.

குழந்தையின் குறைவான எடை என்பது 2.5 கிலோவுக்கும் குறைவாக இருப்பதுதான் கருவளரும்போது ஏற்படும் குறைபாடுகள் எடை குறைவான குழந்தைகள் பிறப்பதற்கு காரணமாய் அமைகின்றன. கர்ப்பகால ஊட்டச்சத்து குறைவு, தொற்று நோய்கள், புகை பிடித்தம், மது அருந்துதல், வைட்டமின் ஏ மற்றும் இரும்பு சத்து குறைவு, மேலும் கர்ப்ப காலத்தின் போது ஸ்டிராய்டு, ஆட்டிபயாட்டிக் என்றழைக்கப்படும் சில உயிர் கொல்லி மருந்துகளை உட்கொள்ளுதல் போன்றவை இதற்கு காரணங்கள் ஆகும்.

குறைந்த எடை சிசுவுக்கு சிறுநீரகத்தின் எடையும் குறைவுதான். சிறுநீரகத்தின் எடை குறைவெனில் சிறுநீரகத்தின் நெஃப்ரான் எனப்படும் செயல் திறனாளிகளின் எண்ணிக்கை குறைவெனில் சிறுநீரகத்தின் ஒட்டுமொத்த கழிவுகளை வெளியேற்றும் திறனும் (Excretory capacity) குறைவுதான். இதனால் சோடியம் (சமையல் உப்பு) உள்ளிட்ட சில இராசாயனப் பொருள்களின் வெளியேற்றமும் குறைவுதான்.

சாதாரண சூழ்நிலையில் ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சராசரி 6-7 லட்சம் வரை இந்த நெஃப்ரான் எனப்படும் செயல் திறனாளிகள் உள்ளன. எடை குறைவான குழந்தைகளிடம் இவைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் சோடியத்தை (சமையல் உப்பு) வெளியேற்றும் திறன் குறைந்த நிலையிலேயே உள்ளது. அதனால் இந்த உப்பின் அளவு உடலின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக இரத்தத்தில் அப்படி அதிகமாகும் சமையல் உப்பே உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணமாகிறது. உணவில் இந்த உப்பின் அளவு தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது, அதாவது கட்டுப்பாட்டில் இல்லாதபோது உயர் இரத்த அழுத்தமும் தொடர்ந்து நீடிக்கிறது. மனித வாழ்வு 18 லட்சம் வருடங்களுக்கு முன்பே உருவானதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பழங்கால மனிதர்களுக்கு உப்பு இருப்பதும், அதன் உபயோகமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அவர்கள் உணவில் உப்பை சேர்த்துக்கொண்டிருக்க முடியாது. சமீபத்தில் தான் அதாவது 6050 ஆண்டுகளுக்கு முன்பு, உப்பு சமையல் அறையில் நுழைந்தது. அதுவும் முதன்முதலில் ருமேனியா மற்றும் சீனாவில் மனிதர்கள் ருசிக்காகவே உப்பை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். வேறு எந்த காரணத்துக்காகவும் அல்ல, உலக உற்பத்தியில் 6 சதவீதம் உப்பு (14 மில்லியன் டன்) சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்றது.

இப்போதும் உலகின் பல பாகங்களில் உள்ள நாடோடி வாழ்க்கை நடத்துபவர்கள் மலை சாதியினர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட 12 கோடி மக்கள் உப்பை உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. இவர்களிடம் உயர் இரத்த அழுத்தம் என்பது கிடையாது. நமது முன்னோர்களான மனிதக் குரங்குகள் மற்றும் அனைத்து பாலுட்டி இனங்கள், காடுகளில் வேட்டையாடி வாழ்பவர்கள் முதலானோர் உப்பை உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. அவர்களிடமும் உயர் இரத்தம் அழுத்தம் என்பது அறவே கிடையாது. சாதாரண மக்களிடையே, சீறுநீரகத்தில் செயல் திறனாளிகளின் நெஃப்ரான் எண்ணிக்கை வேறுபடுகின்றது. குறைந்த பட்சமாக ஒரு சீறுநீரகத்தில் 2 லட்சமும் அதிகபட்சமாக 18 லட்சமும் உள்ளன.

இந்த நிலையில் ஒருவர் உயிருடன் இருக்கும்போது இந்த சிறுநீரக செயல் திறனாளிகள் எத்தனை உள்ளது என்று கண்டுபிடிக்க இயலாது. ஏனெனில் அதற்கான கருவிகள் இல்லை. அதாவது ஒரு நபரின் சிறுநீரகத்தில் இருக்கும் இந்த செயல் திறனாளிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளதா அல்லது நிறைவாக இருக்கின்றனவா என்று தெரிந்து கொள்ள முடியாது. குறைந்த எடை குழந்தைகளில் இந்த செயல் திறனாளிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், அதோடு வேறு சில குறைகள் காணப்படுவதாலும் (vascular Resistance) அவர்கள் வளரும்போது உணவில் உள்ள <ப்பின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நிலையில் அவர்களுக்கு இந்த உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

இது இளம் வயதிலேயேயும் வரத்தான் செய்கிறது. சில சமயங்களில் இச்செயல் திறனாளிகளின் எண்ணிக்கை தேவையான அளவு இருந்தாலும் மரபு அணுவின் திரிபு காரணமாக வடிக்கப்பட்ட உப்பை மீண்டும் கிரகிக்கக்கூடிய சக்தி சிறுநீரகத்தில் அதிகம் இருப்பதால் இவர்களுக்கும் இந்நோய் ஏற்படுகின்றது. உலகெ்கும் பிறக்கும் குழந்தைகளில் 10 முதல் 14 சதவீதம் வரை குறைந்த எடை காணப்படுகிறது. இவர்களே பிற்காலத்தில் உலகின் ஜனத்தொகையில் (18 வயதிற்கு மேற்பட்டோர்) 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட அளவில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக மாறுகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் உயர் இரத்த அழுத்தத்தை தடுப்பதற்கு 2 வழிகளே உள்ளன. 1. குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பதை தவிர்ப்பது - தற்போதைய சூழ்நிலையில் இது முற்றிலுமாக சாத்தியப்படாது. 2. உணவில் உப்பை சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது அல்லது மிகக் குறைந்த அளவில் (நாளொன்றுக்கு 2 கிராம்) சேர்த்துக்கொள்வது - இது முற்றிலும் சாத்தியப்படுவது. ஏனெனில் இது நம்மால் சுலபமாக, எந்தச் செலவுமின்றி, முடியக்கூடியது.

எனவே வாழ்நாள் முழுவதும் உணவில் உப்பு சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது அல்லது மிகக்குறைந்த அளவே சேர்த்துக்கொள்வது மட்டுமே உயர் இரத்த அழுத்தம் வருவதை தடுக்கும். நாம் உண்ணும் உணவில் இயற்கையாகவே உள்ள உப்பின் அளவு 2 கிராம். இது பெரும்பாலானோருக்கு சாதாரண நிலையில் (sedentary life style) உடலின் வெப்பநிலையை சீராக வைக்கும் பொருட்டு அன்றாடம் உற்பத்தியாகும் வியர்வையின் தேவைக்கு (1.25 கிராம்) மேல் அதிகமாகவே உள்ளது. அதனால் நாம் உண்ணும் உணவில் உப்பை சேர்த்துக்கொள்ள வேண்டுமா என்ற கேள்விக்கு இடமே இல்லை. இருந்தாலும் உப்பின் தேவை ஒருவரின் உடலுழைப்பு மற்றும் தட்பவெப்பநிலை உள்ளிட்ட சூழ்நிலைகளின் காரணமாக உற்பத்தியாகும் வியர்வையின் அளவைப் பொறுத்திருப்பதால் அவரவர்களின் உடல் உழைப்பை பொறுத்து கூடுதலான உப்பை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்- சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆனாலும் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தும் அளவுக்கு உடல் உழைப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக குறைந்துகொண்டே வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உயர் இரத்த அழுத்தத்தை தடுக்க வேண்டுமெனில் உணவில் உப்பை சேர்த்துக்கொள்ளக்கூடாது. ஒரு வேளை சேர்த்துக்கொண்டால் அது நாளொன்றுக்கு 2 கிராம் அளவிற்கு மிகைப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிசுக்களின் சீரான வளர்ச்சி மற்றும் உப்பு குறைவான (நாளொன்றுக்கு 2 கிராம்) உணவு ஆகிய இவை இரண்டும் இரத்த அழுத்தம் அதிகம் ஆகாமல் தடுக்கும் இதயம் சிறுநீரகள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை பாதுகாக்கும் 100 ஆண்டுக்கும் மேலான ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் உயர் இரத்த அழுத்த நோயை உலகிலிருந்து மறையச்செய்யும்.

டாக்டர்.ந.முருகேசன்

தலைமை சிறுநீரக வல்லுனர்

ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை, புதுச்சேரி

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close