[X] Close

நிமிடக்கதை: சோதனை மேல் சோதனை!


nimidakkadhai

  • kamadenu
  • Posted: 07 Sep, 2018 09:59 am
  • அ+ அ-

 

வசந்தி அனைவருக்கும் தகுந்த எச்சரிக்கையும் கொடுத்தாள். " எது நடந்தாலும் கவனிக்காதது போல் இருக்க வேண்டும் "

அனைவரும் தலையை அசைத்தனர்.

புதிதாக வீட்டு வேலைக்கு ஆள் வரப்போகிறான். என்னக்காரணத்தினாலோ வசந்திக்கு பெண்களை வேலைக்கு வைப்பதில் சம்மதமில்லை. கேசவ்வும் இதற்கான காரணத்தைக் கேட்டதில்லை. இதற்குப்பின்னால் உள்ள காரணம் ஒன்றும் புதிதான ஒன்றாக இருக்கப்போவதில்லை. சந்தேகம்…சந்தேகம்…சந்தேகம்.

வசந்தியின் சந்தேகத்திற்கு அளவே இல்லை. இவன் வாயைக்கொடுத்து அதற்கு பதில் பேசப்போக, எங்கோ எப்போதோ நடந்த நிகழ்ச்சிகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டு, பின் நடத்தப்படும் விவாதங்கள் அவனுக்கு சலிப்பை மூட்டின. ஒரு நாடகத்தில் நடிப்பது போல் கொடுக்கப்பட்ட வேலையைச்செய்து பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டான்.

இருந்தாலும் நாடகத்தின் முடிவைப்பற்றி அறிய ஒரு குறுகுறுப்போடு காத்திருந்தான்.

வசந்தி ஒரு நூறு ரூபாய் தாளை மாடியில் உள்ள கட்டிலின் அடியில் போட்டாள். கேசவ் , குழந்தைகள் யாரும் கேள்வி கேட்கவில்லை.

“பாருங்க, புதுசா வரப்போகும் வேலைக்காரனை மாடிக்கு பெருக்க அனுப்புவேன். அப்போது நீங்க யாரும் மாடிக்கு போகவேண்டாம்.”

புதிதாக வந்த வேலைக்காரன் மாடிக்குச் சென்று பெருக்கிவிட்டு வந்தான். வசந்தி மாடிக்கு சென்று பார்த்தாள். பீரோவின் கீழ் பணம் இல்லை.

“ சரி, வேலை சுமாராத்தான் இருக்கு. நீ வேண்டாம். இந்தா உன் ஒரு நாள் சம்பளம்”

பணத்தைக் கொடுத்து அவனை அனுப்பினாள்.

“பார்த்தீங்களா, இந்த சோதனையிலே நூறு ரூபாய் நஷ்டம். ஆனால் நல்ல வேளையாக ஆளைப் புரிந்து கொண்டேன். சரியான திருடன்…”பெருமையாக சொல்லிக்கொண்ட வசந்தியை பார்த்து அனைவரும் தலையாட்டி வைத்தோம்.

அடுத்த நாள் இதே கதை, இதே நாடகம், கதாநாயகன் வேறு.

வேலைக்கு வந்த வடகிழக்கு மாகாணத்து தாமோதர் வாசலில் குரல் கொடுத்தான்.

தப்புத்தவறுகளுடனும் தமிழ் பேசினான்.

பெருக்கித் துடைத்து குப்பையுடன் ரூபாயை எடுத்து வந்தான்.

" பீரோ கீழே கிடந்திச்சு"

வசந்தி வாங்கி வைத்தாள்.

" துணியை வாஷிங் மெஷினில் போடு"

திரும்பி வந்தான். ஐந்நூறு ரூபாய் நோட்டுடன்.

”ஷெர்ட் பாக்கெட்டில் இருந்திச்சு"

வேலை முடிந்தபின்  வசந்தி ... “சரி, வேலை சுமாராத்தான் இருக்கு. நீ வேண்டாம். இந்தா உன் ஒரு நாள் சம்பளம்” .

கேசவ்விற்கு லேசாக ஆச்சர்யம் எட்டிப்பார்த்தது. இவனை ஏன் நிராகரிக்கிறாள்?

”காரணம் இருக்குங்க.  இதேபோல் தான் , நம்ம சாந்தி வீட்டுலே  இரண்டு வருஷமா இருந்தான் பாருங்க, போன வாரம் நகையை திருடிட்டானாம். போலீஸ் ஸ்டேஷன்னு பாவம் அலைச்சல்தான் அவளுக்கு. இவனும் அப்படித்தான். நல்லவன் போல நடிச்சு ஏமாத்திடுவான். வேற ஆளைப் பார்க்கலாம்..”

கேசவ் ஒன்றும் புரியாமல் விழித்தான். நல்ல வேளையாக வசந்தி அவனிடம் சொல்லவில்லை. இன்று வந்த தாமோதர் மாடியில் இருந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை கொண்டு வந்ததும், அந்த மற்றொரு ரூபாய் நோட்டு சென்ற சோதனை ஆட்டத்தில் கண்களில் படாமல் ஓரமாக பீரோ அடியில் ஒளிந்த ஒன்று என்பதும், அதனால் அவள் வேறு சோதனைத் திட்டத்திற்கு மாறி விட்டாள் என்பதையும்.

 - லதா ரகுநாதன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close