[X] Close

நிமிடக்கதை : முன் பின் எச்சரிக்கை


nimidakkadhai

  • kamadenu
  • Posted: 14 Aug, 2018 12:23 pm
  • அ+ அ-

என் அழுத்தமான கண் அசைவுகளைத் துளியும் கவனிக்காமல் ஜானு தன் உரையாடலை சத்தமாக நடத்திக்கொண்டிருந்தாள். இதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் உரையாடலைக் கவனிக்கத்தொடங்கினேன்.

ஜானு, ’’உங்களுக்கு முட்டு வலி இருக்கே, எப்படி போகப்போறீங்க?"  என்றாள்.

’’ஆமாம், ரொம்பவும் அதிகமாகத்தான் இருக்கு. வீடு பக்கம்தான், ஆனாலும் இப்போது நடக்க முடியாதுதான்’’.

நான் எது நடக்கக்கூடாது என்று கண் ஜாடை காட்டி எச்சரிக்க நினைத்தேனோ அது அப்போது நடந்தே விட்டது.

ஜானு... ராகவ் கூட இப்போது வெளியே கிளம்பப்போகிறார். இன்னும் பத்து நிமிடம் காத்திருக்க முடியுமானால் டிராப் செய்து விட்டுப்போவார்"

காத்திருந்தார்போல் சோபாவிலிருந்து எழுந்த ரவி. ஒரு பெரு மூச்சுடன் மறுபடியும் சோபாவில் அமுங்க, நான் என் தலைவிதியை, ஜானுவின் அடிமுட்டாள் தனத்தை, ரவியின் அசட்டுத்தனத்தை என்று எல்லாம் ஒரு கலவையாக நொந்து கொண்டேன்.  

ஒருவருக்கு லிப்ட் கொடுப்பது என்ன இப்படிக் கவலைப்படவேண்டிய ஒரு செயலா என்று நீங்கள் கேள்வி கேட்டால்...

உங்களுக்கு ரவியைப்பற்றித் தெரியாது, இதற்கு முன் இதேபோல் அவனை நான் காரில் டிராப் செய்ய அழைத்துச்சென்ற போதெல்லாம் நடந்ததும் உங்களுக்குத்தெரியாது.

ரவியுடன் எனக்கு அது முதல் அனுபவம். ஆபீஸ் வேலையாக அன்று அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தேன். ஆபீசிலிருந்து கார் வந்திருந்தது.

" எந்த வழியாகப் போகிறாய்?"   - நடக்கப்போவதை அறியாமல். ,

" அட..உனக்கு எங்கே போகணும் சொல்லு, டிராப் செய்கிறேன். "

வாயிலே சனி என்பது இதுதான். அவன் வழி சொல்ல ரைட்டில் திரும்பி, லெப்டில் ஒடித்து, ஒன் வேயில் சென்று போலீசுக்கு தண்டம் அளித்து, சொல்லாமல் போனதற்கு ரவியிடம் காரணம்கேட்க...

"அது...வந்து...." சொல்ல ஆரம்பித்தபடியே கைகளில் குடித்து முடித்த தம்ஸ் அப் க்ளாஸ் பாட்டிலை மூடி இருந்த ஜன்னல் வழியே முழு பலத்துடன் வீசி எறிய...

"ஏய்...ஏய்...கண்ணாடி...ஜாக்கிரதை" என் வார்த்தைகள் உடைந்த கார் கண்ணாடியின் ஜிலீர் சப்தத்தில் அமுங்கிப்போனது. கம்பெனியில் இருந்து வந்த கார் கண்ணாடி பில்லுக்கு தண்டம் அழுதேன்.

சரி, ஒரு முறை பட்டுவிட்டேன். புரிய வேண்டாம். அடுத்த முறை இதேபோல் அழைத்துச்சென்று, ஓரமாக நிறுத்திய காரின் இந்த வழியாக இறங்காமல், தாண்டிக்குதித்து நான் எதிர்பார்க்காத நேரத்தில் ரோடு சைடு கதவைத்திறக்க, அந்தப் பக்கமாக அரத பழசான சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் அரத பழசான ஓர் ஆள் மீது இடித்து, அய்யோ செத்தேன் என்று குரல் கொடுத்தபடி அவன் கீழே விழ, பின் என்ன, உடைந்து போன இரண்டு பற்களை கையில் வாங்கிக்கொண்டு கீழே விழுந்தவனுக்குத் தண்டம் அழுதேன்.

இப்போது சொல்லுங்கள், உங்களுக்கு இப்படி நடந்திருந்தால் இப்போது ஜானுவின் பேச்சிற்கு நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்??

" இல்லை, ரவி...நீ கிளம்பு, அர்ஜெண்டா போன் பேச வேண்டும். யூ சி, எ கான் கால்."

"அட... நமக்கு என்ன நேரக்கணக்கு. பெரிய வேலையா என்ன?  வெட்டியா முறிக்கப்போகிறேன்...மெதுவாகத்தான் வாயேன்... ஜானகியோடு பேச நிறைய விஷயம் இருக்கு..."

தப்பிக்க வழி இல்லை என்று தெரிந்ததும் உடனே கிளம்பினேன்.

" சரி வா, ஆபீசுக்குப்போய் பேசிக்கொள்கிறேன்."

என்றும் இல்லாமல் மூன்று முறை கடவுளுக்கு நமஸ்காரம் எனக்கே அதிகமாகத் தோன்றினாலும், இந்த முறை என்னைக் காப்பாற்றப் பிராது வைத்தேன்.

மிக யோசித்து ரவியைப் பின்னால் உட்காரச்சொன்னேன்.

"அட என்னப்பா. உன்னைப் பாக்கும்போது டிரைவர் போல இல்ல தெரியும். நானும் ஃபிரண்டிலே உட்கார்ந்து வரேன்" எனக்குப் பேச வாய்ப்பளிக்காமல் ஏறி அமர்ந்து கதவை படாரென்று சாத்தினான்.

கடவுளே இன்று என்னைக் காப்பாத்து.

மிகவும் ஜாக்கிரதையாக முப்பதில் காரை ஓட்டினேன். ஒரு கண் ரவி மீது வைத்தபடி மிக நிதானமாகச் சென்றேன். அவன் கை அசையும் போது பிரேக்கில் கால் வைத்தேன்.

அய்யோ....எதிர்பாராமல் குழந்தை ஒன்று குறுக்கே ஓடி வர, நான் நிலைகுலைய, பக்கத்தில் இருந்த ரவி சடாரென்று ஹாண்ட் ப்ரேக்கைப்போட, ஒரு இழையில் இடிபடத் தப்பிய குழந்தை சிரித்தபடி டாடா காட்டியது.

 - லதா ரகுநாதன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close