[X] Close

நிமிடக்கதை : படக்கதை!


nimidakkadhai

  • kamadenu
  • Posted: 06 Aug, 2018 15:52 pm
  • அ+ அ-

ஜானகி, உச்சரிப்புக் கோளாறுடன் சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைச் சொல்லி கடவுளையே கொலை செய்துகொண்டிருந்த அந்த அதிகாலைப்பொழுது.

அவள் கைப்பேசி, விடாமல் ரிங்கித்தது. ஸ்லோகத்தினூடே,  நாசமாப்போக யார் அது காலை வேளையிலே... என்பதையும் ஒரு ஸ்லோக அக்‌ஷரமாக உச்சரித்தது. போனின் ஸ்க்ரீனில் தெரிந்த கமலா பெயர் லப் டப்பை அதிகரிக்க... என்ன சமாசாரமாக இருக்கும், இந்தக் காலை வேளையிலேயே... என்று பலபல கற்பனைகளாக சிந்தித்தாள்.  

" ஹலோ...கமலா.. என்ன விஷயம்..?"

" ஜானகி, முக்கியமா ஒண்ணுமில்ல...நீ இப்போ எங்கிருக்கே?"

" என்ன கேள்வி இது.. வீட்டில்தான்"

" அதான். எந்த வீட்டில், அந்த ஓல்ட் ஏஜ் ஹோமிலேயா.. ? பாவம் நீ, என்ன மருமகளோடு சண்டையா? உன் பிள்ளை அப்படி இல்லை உன்னை பார்த்துப்பான்னு இல்ல நினைச்சேன். அது சரி, என் நிலைமை எப்படி ஆகப்போகுதோ? ஆமாம், அந்த ஓல்ட் ஏஜ் ஹோம் எப்படி இருக்கு...? கேட்டு வெச்சுக்குறேன்...." கேள்வி மட்டும் கேட்டு பதில் எதிர்பார்க்காத ட்ரேட்மார்க் கமலா.

"நிறுத்து நிறுத்து கமலா, கேள்வியா கேட்டுக்கிட்டே இருக்கே. இரு முதலில் நான் என் மகன் கூட இல்லைன்னு யார் சொன்னது..?"

" பாத்தியா....உன் க்ளோஸ் பிரெண்ட், என்கிட்டியே மறைக்கிற. சரி சரி நீ சொல்லவேண்டாம். அதான் மவுண்ட்ரோட் நட்ட நடு ரோடிலே பெரிசா நீயும் மிஸ்டர் சங்கரனும் ஒரு பார்க்கிலே சந்தோஷமா சிரித்தபடி இந்த ஓல்ட் ஏஜ் ஹோம் பத்தி உலகுக்கே சொல்றீங்களே..." கமலா நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனாள்.

போனை வைத்த கையோடு கணவனை நோக்கிச்சென்றாள் ஸ்லோகத்தைக் காற்றில் விட்டபடி.

கைகளில் பிரித்து வைத்த தினப்பேப்பருடன் கண்கள் குத்திட்டு பேயறைந்தது போல் அமர்ந்திருந்தார் சங்கரன்.

" என்னங்க..என்ன ஆச்சு ... ??"

கைப்பேசி மறுபடியும் ரிங்கிட...

"ஹலோ..என்னடா அருண், இப்போதான் ஆபீஸ் போய் சேர்ந்திருப்பே.. எதையாவது மறந்து வெச்சுட்டு போயிட்டியா...?"

" அம்மா, உன் உடம்புக்கு என்னமா...?"

"என்ன அபத்தமா கேட்கிற? உனக்குத்தெரியாம எப்படிப் போகும்?"

" சரி அப்ப அப்பாக்கு உடம்பு சரி இல்லியா?"

" என்னடா உளர்ற?"

"யாரு நானா.. என் பாஸ் கேக்கிறாரு... உன் அப்பா அம்மா இந்த ஹாஸ்பிடலை அப்படி ரெகமெண்ட் செய்றாங்க.. அவர் அப்பாவிற்கு ட்ரீட்மெண்ட்டிற்கு போகலாமான்னு...சரி, இப்போ சொல்லு, நீ எப்போ அங்கே போனே, எதுக்கு, யாருக்கு உடம்பு? நான் குழந்தைகளோடு சிங்கப்பூர் போன அந்தப் பதினைந்து நாளிலா?"

ஜானகிக்குச் சுத்தமாக புரியவில்லை.

"என்னடா சொல்றே...? எந்த ஹாஸ்பிடல்,எப்போ போனோம்?"

" ம் ,என்னைக்கேளு, இரு வாட்ஸ் அப்பில் உங்க போட்டோவை அனுப்பி வைக்கிறேன். சாயந்தரமா பேசலாம்."

டுடிங்குடன் வந்த வாட்ஸப் மெசேஜில் அவளும் சங்கரனும் ஒரு பிரபலமான மருத்துவமனை முன் சந்தோஷமாக சிரித்தபடி ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் போட்டோவுடன் "இங்கே வந்தேன் இனி இல்லை என் மூட்டுவலி" என்ற காப்ஷனுடன்.

"என்னங்க.. இதப்பாருங்க... நினைவிருக்கா. அன்னைக்கு நாம பார்க் போனபோது ஒரு பொண்ணு நம்மை போட்டோ பிடிச்சு, ஆண்ட்டி, இதை நான் உபயோகிச்சுக்கலாமான்னு கேட்டா பாருங்க. இப்போ மவுன்ட்ரோடிலே நம்ம போஸ்டர், பேப்பரிலே நம்ம போஸ்டர்.. பாருங்க நாம இப்போ அவ்வளவு பேமஸ். ஆனா ஒண்ணு, அந்தப்பெண் இப்படி எல்லாத்திற்கும் உபயோகிக்க நம்மை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம், இல்லை " பெருமையாகக் கணவனைப் பார்த்தாள்.

சங்கரன் இன்னும் அதே பேய் முழியோடு மந்திரித்து விட்ட கோழி கணக்காக எதையோ பார்த்து விழித்துக்கொண்டு இருக்க, அவர் கைகளில் இருந்த தினப்பேப்பரில் இவர்கள் போட்டோவும் அதன் கீழ் வாக்கியங்களும்..

வயதானால் என்ன...இருக்கவே இருக்கிறது.xxxxx எந்த வயதிலும் நீங்கள் இளமையாக...துடிப்பாக...இதோ இவர்களைப்போல்.......!!!

லதா ரகுநாதன்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close